பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் தினசரி பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 219 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 220-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ரூ100.75-க்கும், டீசல் ரூ92.34-க்கும், கேஸ் ரூ88.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2515 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 157 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 317 மில்லியன் கன அடியாக உள்ளது.
-
Oct 23, 2024 22:07 ISTமதுரையில் கனமழை: நிர்வாக கவனக்குறைவால் மக்கள் இன்னல் - சு. வெங்கடேசன் எம்.பி
மதுரையில் ஏற்பட்ட மழை பாதிப்பு படங்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை டேக் செய்து சு. வெங்கடேசன் எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அதீத மழை மற்றும் எதிர்பாராத வெள்ள நீரால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், நிர்வாகத்தின் கவனக்குறைவாலும் முன்னெச்சரிக்கை இன்மையாலும் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Oct 23, 2024 21:16 ISTஉலகளவிய அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்திய - சீன உறவுகள் முக்கியம் - மோடி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி பதிவு: “உலகளவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்திய - சீன உறவுகள் மிக முக்கியம்; பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.
-
Oct 23, 2024 21:12 ISTவட தமிழகத்தில் செல்போன் டவரில் தொலைத்தொடர்பு சாதனங்கள் திருட்டு; 33 பேர் கைது
தமிழகத்தின் வடமாவட்டங்களில் செல்போன் டவரில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சாதனங்கள் திருடப்பட்ட வழக்கில், உ.பி., டெல்லி உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல உட்கோட்ட டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் தலைமையில் 30 பேர் கொண்ட சிறப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்; 2022 முதல் 2 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சாதனங்களைத் திருடி வந்தது அம்பலமானது.
-
Oct 23, 2024 21:08 ISTதீபாவளி பண்டிகைக்காக கோவை மாநகரில் இரவு 1 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி - காவல்துறை அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை ஒட்டி, கோவை மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால், நள்ளிரவு 1 மணி வரை வியாபாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
-
Oct 23, 2024 19:44 ISTதொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்ஃபான்; 10 நாட்களுக்கு தடை - மருத்துவமனை மீது நடவடிக்கை
யூடியூபர் இர்ஃபான் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 23, 2024 18:48 ISTதொகுதி வரையறை; திருமாவளவன் வலியுறுத்தல்
நாடாளுமன்ற தொகுதிக்கான சீரமைப்பு, மக்கள் தொகை என்ற ஒற்றை அளவுகோலோடு இருக்கக் கூடாது வேறு சில அளவுகோல்களும் தேவை என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
-
Oct 23, 2024 18:28 ISTபோலி என்.சி.சி முகாம் - ஐகோர்ட் கேள்வி
4 பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? உள்நோக்கம் என்ன? என சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
-
Oct 23, 2024 18:11 ISTசீன அதிபர் ஜின்பிங் - மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்
ரஷியாவின் கஸான் நகரில் நடந்துவரும் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் இரு தரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்
-
Oct 23, 2024 18:07 ISTகனமழை - வெள்ளக்காடான கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
-
Oct 23, 2024 17:48 ISTகால்வாயில் இருந்த குப்பைகளை அகற்றச் சென்ற நபர் நீரில் மூழ்கியதால் பரபரப்பு
மதுரையில் கால்வாயில் இருந்த குப்பைகளை அகற்றச் சென்ற நபர் நீரில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, நீரில் மூழ்கிய நபரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்
-
Oct 23, 2024 17:38 ISTடெல்லியில் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பு
டெல்லியில் பார்க்கிங் கட்டணத்தை இரட்டிப்பாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது
-
Oct 23, 2024 17:19 ISTசி.எம்.டி.ஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
-
Oct 23, 2024 17:12 ISTகடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது
லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.25,000 லஞ்ச பணத்தை கொடுக்க முயன்ற அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்
-
Oct 23, 2024 17:01 ISTசென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்
சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் சோதனை ஓட்டமாக மெட்ரோ ரயிலை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ 2-ஆம் கட்ட திட்டத்தில் இயக்கப்படும் ஓட்டுநர் இல்லா ரயிலின் சோதனை ஓட்டம், பூவிருந்தமல்லி பணிமனையில் இருந்து தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி இதற்கான சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
-
Oct 23, 2024 16:53 ISTமாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை
இந்தியா முழுவதும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தக் கோரி மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு, விசிக எம்பி ரவிக்குமார் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி, பகுதியளவு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் ஆகவும், முழு அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 15 ஆயிரம் ஆகவும் உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Oct 23, 2024 16:41 IST14 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. டாடா நகர் - எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் இருந்து இறங்கிய பிரவின் ராஜ் என்பவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
-
Oct 23, 2024 16:33 ISTதவெக மாநாடு - மொழிப்போர் தியாகிகளின் படங்கள்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே நடைபெறவுள்ள தவெக மாநாடு முகப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் படங்கள் ஆகியவை இடம்பெறுவதாக கூறப்படுகிறது. மேலும், மாநாட்டுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.
-
Oct 23, 2024 16:22 ISTசென்னை அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழா வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெறவுள்ள இந்த விழாவில், ஆளுநர் ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தேசிய அங்கீகார வாரிய தலைவர் அனில் சஹஸ்ரபுதே ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
-
Oct 23, 2024 16:11 ISTவிஜய்யை பார்த்து தமிழக அரசு பயப்படுகிறது - தமிழிசை
விஜய்யை பார்த்து தமிழக அரசு பயப்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தவெக மாநாட்டிற்கு பேருந்து அனுப்பும் உரிமையாளர்களை திமுகவினர் மிரட்டுவதாக தகவல் வருவதாகவும், அதன் மூலம் விஜய்யை பார்த்து தமிழக அரசு பயப்படுவது போன்று தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Oct 23, 2024 15:59 ISTபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
டாணா புயல் உருவானதை தொடர்ந்து, எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
Oct 23, 2024 15:31 ISTகவரப்பேட்டை ரயில் விபத்து சதிச் செயலா?
கவரப்பேட்டை ரயில் விபத்து சதிச் செயலா? என்ற கோணத்தில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, VPN-ஐ பயன்படுத்தி போன் பேசி சதித்திட்டம் தீட்டப்பட்டதா? என்று விசாரிக்கப்படுகிறது.
-
Oct 23, 2024 15:12 ISTநெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்
தீபாவளியை முன்னிட்டு நெல்லை மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லையில் இருந்து நவம்பர் 3-ஆம் தேதி மாலை 4 மணிக்கும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 4-ஆம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
Oct 23, 2024 15:07 ISTவேட்பாளர் பட்டியல் வெளியீடு
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 38 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
Oct 23, 2024 15:00 ISTமதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்
மதுரை மாவட்டத்தில் அக். 27,28,29 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை ஒட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் அடைக்கப்படும். மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும்
-
Oct 23, 2024 14:58 ISTஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தரவு திருட்டு - தள்ளுபடி
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிடகோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
-
Oct 23, 2024 14:53 ISTபூட்டை உடைத்து சோதனை
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஒரத்தநாடு அருகே உள்ள பேய்கரும்பன் கோட்டையில் வைத்திலிங்கத்தின் மைத்துனர் பன்னீர்செல்வம் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தி வருகிறது. வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால், உறவினர்களை வைத்து பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
-
Oct 23, 2024 14:19 ISTவாகன உற்பத்தி தொழிற்சாலையை நவீனமயமாகும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம்
ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் முடிவு எடுத்துள்ளது. ஒசூரில் உள்ள 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி ஆலையை நவீமையமாக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
3.28 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள கட்டுமான பகுதியை 5.22 லட்சம் சதுர அடி பரப்பளவாக விரிவாக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது. பார்க்கிங், ஆய்வக வசதி, அலுவலக கட்டடம், வாகனங்களுக்கு வண்ணம் அடிக்கும் இடம், உற்பத்தி கட்டடம் ஆகியவைகளும் அமைய உள்ளன. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்த உடன் நவீனமயமாக்கும் பணியானது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Oct 23, 2024 14:00 ISTவயநாடு இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி
வயநாடு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரியங்கா காந்தி தற்போது வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இருந்தனர். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் ரோடு ஷோ (வாகன அணிவகுப்பு) நடத்தினார்.
வயநாடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Oct 23, 2024 13:57 ISTபுதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 1500, கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ. 5000 வழங்கப்படும் என்றும், ரூ. 1000-மதிப்புள்ள பத்து பொருட்கள் அடங்கிய மளிகை பொருள்கள் மானிய விலையில் ரூ 500க்கு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளர்.
-
Oct 23, 2024 13:56 ISTதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற நிலையில், நாளை தீவிர புயலாக
வலுப்பெற்று நாளை மறுநாள் காலைக்குள் கரையை கடக்கும். இதனையொட்டி, நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 23, 2024 13:51 IST'அவர்தான் பகல் கனவு காண்கிறார்': ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் பதிலடி
அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நான் கனவு காண்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவர்தான் பகல் கனவு காண்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எந்த சரிவும் இல்லை, தி.மு.க.வுக்குதான் சரிவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் பொறுப்பு வாங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளார்.
தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிக் கொள்கிறார். பொய்யை பொருந்துவது போல் கூறினால் உண்மை திருதிருவென்று விழிக்கும் என்பது போல் முதல்வர் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தேசிய கட்சி கேட்டது. வலிமையான கட்சியான அ.தி.மு.க. பூத்துக் குலுங்கும் மலர் போன்றது. மலராக அ.தி.மு.க. பூத்துக் குலுங்க கூட்டணிக் கட்சிகள் தேனீக்களாய் வரும். தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் கட்சியின் உயர் பொறுப்புக்கு வர முடியும்." கூறினார்.
-
Oct 23, 2024 13:49 ISTவைத்திலிங்கம் வீட்டில் சோதனை - திரளும் ஆதரவாளர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள வீட்டில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதனையொட்டி, மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
வீட்டின் உள்ளே வைத்திலிங்கம் உள்ள நிலையில், வெளியே அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். சென்னையில் வைத்திலிங்கம் குடியிருக்கும் எம்.எல்.ஏ விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் முறைகேடாக சொத்து சேர்த்த புகாரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Oct 23, 2024 13:46 ISTபாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 ஏற்றம்
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நேற்றைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நிலையில், அது தற்போது டானா புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அக். 25ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும். இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.
இந்த நிலையில், பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 ஏற்றப்பட்டுள்ளது.
-
Oct 23, 2024 12:55 ISTதீபாவளி விடுமுறை - கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளியை ஒட்டி பயணிகளின் வசதிக்காக கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளன. மேலும் காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், சூலூர், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்காக இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
Oct 23, 2024 12:54 IST30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆந்திர அரசு பேருந்து: 20 பயணிகளுக்கு பலத்த காயம்
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் இருந்து கடப்பா மாவட்டத்திற்கு அரசு பேருந்து 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திடீரென எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தகவலறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் பிரசாத் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
Oct 23, 2024 12:27 ISTமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் - ஓ.பி.எஸ்
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின்மீது சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதற்கென தனி அரசாணையே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். இந்த ஆணை உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சியில், நான்கு ஆண்டுகளாக குடியிருக்கும் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க பல முறை வலியுறுத்தியதாகவும், அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சி ஆதிதிராவிட குடியிருப்புகளுக்கு சாலை, எரிமேடை மற்றும் சமுதாயக்கூடம் வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், இந்தக் கோரிக்கைகளை நேரில் சென்று வலியுறுத்த ஊராட்சித் தலைவர் சென்னையில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநரை சந்திக்கச் சென்றதாகவும், இவருடன் திருச்சி மாவட்டம், கிருஷ்ணாபுரம், கடலூர் மாவட்டம், சி. முட்லூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், செம்மரம்பாளையம் ஊராட்சித் தலைவர்களும் அவரவர்களது கோரிக்கைகளை நேரில் வலியுறுத்த வந்திருந்ததாகவும், ஆனால், நாள் முழுவதும் காத்திருந்தும் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநரை சந்திக்க இயலவில்லை என்றும் தெரிவித்து தன்னுடைய மன உளைச்சலை பிரதாபராமபுரம் ஊராட்சித் தலைவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தச் செய்தி பத்திரிகையிலும் வெளி வந்துள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அரசு அலுவலகங்களை நாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சென்றாலே அவமரியாதை என்கின்ற நிலையில், "மக்களைத் தேடி மருத்துவம்", "இல்லம் தேடி கல்வி" என்றெல்லாம் சொல்லப்படுகிற திட்டங்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை இதற்குப் பெயர்தான் "திராவிட மாடல்" போலும்!
முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முழு மரியாதை அளித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றித் தர அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும், உள்ளூரில் உள்ள அலுவலகங்களின் மூலமோ அல்லது கணினியின் மூலமோ அவர்களது கோரிக்கையின் நிலையை அறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Oct 23, 2024 12:24 ISTமதுபானம் சட்டம் - 'மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது' - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
தொழில்துறை மதுபானம் மீதான சட்டங்களை உருவாக்கும் மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது என்றும், அதன் உற்பத்தியில் மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனம் தீர்ப்பு அளித்தது.
பட்டியல் II (மாநிலப் பட்டியல்) இன் நுழைவு 8ன் கீழ் உள்ள போதையூட்டும் மதுவின் பொருள் மதுபானங்களின் குறுகிய வரையறைக்கு அப்பாற்பட்டது என்றும் தீர்ப்பு வழங்கினர்.
தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், அபய் எஸ் ஓகா, பிவி நாகரத்னா, ஜே பி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் உட்பட அரசியல் சாசன அமர்வின் ஒன்பது நீதிபதிகளில் எட்டு பேர் விளக்கத்தை ஆதரித்தனர். நீதிபதி பிவி நாகரத்னா மறுப்பு தெரிவித்தார்.
-
Oct 23, 2024 11:14 ISTதிமுக கூட்டணி தேர்தலுக்கானது அல்ல, கொள்கைக்கான கூட்டணி: மு.க.ஸ்டாலின்
திமுக கூட்டணி தேர்தலுக்கானது அல்ல, கொள்கைக்கான கூட்டணி. திமுக கூட்டணியில் விவாதம் இருக்கலாம், விரிசல் ஏற்படாது. பொறாமையில் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துகளை கூறுகிறார் "விரக்தியின் எல்லைக்கு சென்று ஜோசியராகவே மாறிவிட்டார். மக்களால் போற்றக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Oct 23, 2024 11:13 IST30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 30 பயணிகள் படுகாயம்
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே, புலிவெந்தலா நோக்கி சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணித்த 30 பயணிகள் காயமடைந்த நிலையில், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அருகே வசிக்கும் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
-
Oct 23, 2024 10:36 ISTஎடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கிய நண்பர் இளங்கோவன் கல்லூரியில் வருமானவரி சோதனை
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கிய நண்பரான இளங்கோவனுக்கு சொந்தமாக முசிறியில் செயல்படும் எம்.ஐ.டி பாலிடெக்னிக் மற்றும் வேளான் பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இளங்கோவன் மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Oct 23, 2024 10:16 ISTவலு பெற்ற டாணா புயல்: மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை
மத்திய வங்கக்கடல் பகுதியில் டானா புயல் உருவாகியுள்ள நிலையில், நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு ஒடிசா, மேற்குவங்க கடற்கரையை ஒட்டிய பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ள நிலையில, கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 23, 2024 10:15 ISTமுன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள வீட்டில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் உள்ளே வைத்திலிங்கம் உள்ள நிலையில், வெளியே அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடாக சொத்து சேர்த்த புகாரில் சோதனை நடைபெறுவதாக தகவல்
-
Oct 23, 2024 09:17 ISTமேட்டூர் அணையின் நீர் மட்ட விபரம்
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் ஒரே நாளில், நடப்பு ஆண்டில் 2-வது முறையாக 100.01 அடியை எட்டியது. அணைக்கு வரும் நீரின் அளவு 17,586 கன அடியில் இருந்து, 29850 கன அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசத்திற்கு, வினாடிக்கு 7500 கனடி நீர் திறக்கப்படுகிறது.
-
Oct 23, 2024 09:15 ISTபள்ளத்தில் கவிழ்ந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர்
சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் தண்ணீர் டேங்கர் டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. நல்வாய்ப்பாக ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Oct 23, 2024 09:12 ISTதீபாவளி சிறப்பு ரயில்: 10 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!
தீபாவளி பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், 10 நிமிடத்தில் முழுமையாக விற்று தீர்ந்தன
-
Oct 23, 2024 09:11 ISTஅடியாட்களுடன் மிரட்டுவதாக இசையமைப்பாளர் தேவா மகள் மீது குற்றச்சாட்டு
இசையமைப்பாளர் தேவாவின் மகள், அடியாட்களுடன் மிரட்டுவதாக, அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாடகை பிரச்சினை தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ள நிலையில், பொய் செய்தியை பரப்புவதாக தேவாவின் மகள் ஜெயபிரதா விளக்கம் அளித்துள்ளார்.
-
Oct 23, 2024 09:09 ISTகுஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!
நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால் தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி பாபுஜி கோரியுள்ளார். மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார் போலி நீதிபதி சாமுவேல். இந்த தீர்ப்பை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கிய நிலையில், அதன்மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து போலி நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகாரளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேலின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகின
-
Oct 23, 2024 09:06 ISTசென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் இந்த ஏலம் நடைபெற உள்ளது. ஏலம், நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும், மாலை 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
-
Oct 23, 2024 09:05 ISTவங்கக்கடலில் உருவானது டாணா (DANA) புயல்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. அக். 25ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும். இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.
-
Oct 23, 2024 09:04 ISTதிண்டிவனத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த கோரி வி.சி.க எம்.பி ரயில்வே அமைச்சருக்கு கடிதம்
திண்டிவனத்தில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ரயில்வே அமைச்சருக்குக் விசிக எம்.பி. ரவிகுமார் கடிதம் எழுதியுள்ளார். ரயில் வருகை, புறப்பாடு மற்றும் கோச் நிலைகள் பற்றிய அறிவிப்புகளைக் காண்பிப்பதற்கான அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும் என்றும், காத்திருப்பு அறைகள் மற்றும் நடைமேடைகளில் டிவிக்களை அமைக்க வேண்டும் என்றும், பயணிகளுக்குக் கழிப்பறைகளை நிறுவ வேண்டும் என்றும், ஒவ்வொரு நடைமேடையையும் முன்பதிவு அலுவலகம் மற்றும் பார்சல் அலுவலகத்துடன் இணைக்கும் டிராலி பாதையை அமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.