தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
10.5% இடஒதுக்கீடு – தடை விதிக்க மறுப்பு
வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்குத் தடை கோரி சந்தீப் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இந்த 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து இயங்கவும், டாஸ்மாக் கடைகள், வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடு
பருப்பு விலை மேலும் உயர்வதை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் வரும் அக்டோபர் மாதம் வரை பாசிப்பருப்பு தவிர மற்ற அனைத்து வகை பருப்புகளையும் இருப்பு வைக்க மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு
கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும், தற்போது 8 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் வாராக்கடன் 9.8% சதவீதமாக அதிகரிக்கும்: ஆர்பிஐ
வங்கிகளின் மொத்த வாராக்கடன் அடுத்த ஆண்டு மார்ச்சில் 9.8 சதவீதமாக அதிகரிக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நிலைமை இன்னும் மோசமடையும்பட்சத்தில் வாராக்கடன் 11.22 சதவீதமாக அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், இன்று 4013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 115 பேர் உயிரிழப்பு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த கடிதத்திற்கு உரிய முறையில் பதில் அளிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியள்ளார்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வியாபாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தலைமைறைவாக இருந்த இதயம் அறக்கட்டளை நிறுவனரான சிவக்குமார், மதர்ஷா இருவரும் கேரள எல்லையில் கைது செய்யப்பட்டனர்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்
மதுரையில் சட்டவிரோதமாக இடைத்தரகரிடம் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்ந்து வந்த தம்பதிகளிடம் இருந்து இரட்டை பெண் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி நாட்டு மக்களை வதைப்பதா? என மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கில், நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் மாநில முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்டில் உள்ள கட்டிமா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்
மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அணையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
தன்னை சந்தித்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முருகர் சிலையை பரிசளித்தார் யோகிபாபு
சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், சேலம், நீலகிரி, ராமநாதபுரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவித்துள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பாஜக குரல் கொடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்புலன்ஸ் வசதி இல்லாததே பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என்று கன்னியாகுமரியில் பிரசவத்திற்கு பிந்தைய ரத்த கசிவால் உயிரிழந்த பெண்ணின் இறப்பு குறித்து கூறிய நீதிமன்றம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நியாய விலைக்கடைகளில் தரமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கால தாமதமின்றி புதிய குடும்ப அட்டைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடைக்குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளம்பர நோக்கத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். குழு நியமனத்தில் அரசியல் சாசன விதிகள் மீறப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ வழக்கு தொடுக்கவில்லை. வெறும் வியூகத்தின் அடிப்படையிலேயே வழக்கு தொடுத்துள்ளார் என்றும் அரசு தரப்பு பதிலில் கூறப்பட்டுள்ளது.
வருங்கின்ற கால கட்டங்களில் நல்ல கருத்துகளை கூறும் படங்களை எடுக்கவே இயலாது. மத்திய அரசின் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் படங்களை எடுக்க வேண்டும் என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது எனவே மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணப்பையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பணப்பையை கொள்ளையடித்த சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாமை பெண்ணாடத்தில் துவங்கி வைத்தார் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்.
பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரன் ராவ் இருதரப்பு இசைவுடன் விவாகரத்து செய்துள்ளனர். 2005ம் ஆண்டு இவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மார்கண்டேய நதியில் கர்நாடகா அரசு அணை கட்டும் விவகாரத்தில் நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கொரோனா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்து வரும் வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து அவர் எழுதிய 11 பக்க கடிதம் கிடைத்துள்ளது.
பெற்றோரை பிரிந்து தனியாக இங்கு தங்கி படிக்க தன்னால் முடியவில்லை. மேலும், ஆய்வுக்கான பாடம் கடினமாக இருப்பதாகவும், தன்னால் சாதிக்க முடியாது என்றும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் உருக்கமாக 11 பக்கத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா 2அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 738 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் 738 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்
கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 130 கொரோனா நோயாளிகளிடம் கோவாக்சின் 3ஆம் கட்ட பரிசோதனையை நடத்தி முடித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.