தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
மின் கணக்கிடும் பணிகள் வழக்கம்போல் நடைபெறும்
தமிழகத்தில் மின் கணக்கிடும் பணிகள் இனி வழக்கம் போல் நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் நுகர்வோருக்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அது ஜூன் 15ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறையை அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
ஆட்டோவில் பயணம் செய்ய இ-பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும், அமைப்புசாரா தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
55 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 55 பேரை இடமாற்றம் செய்து உயர்நீதிமன்ற தலைப் பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்.
10கோடி தடுப்பூசி தேவை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியாக 5.68 கோடி பேர் உள்ள நிலையில், இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி தேவை உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை
மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வந்தது. தமிழகத்திற்கு இதுவரை 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 9118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2397864 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு இன்று 210 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 30548 ஆக உயர்ந்துள்ளது.
உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா மீது காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை நகலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை வரும் ஜூன் 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலை பள்ளியில் கூடுதல் பாடப்பிரிவுகள் மற்றும் ஆங்கில வழிக்கல்வி தொடங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடத்திய ஆலோசனையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமருடனான சந்திப்பில், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் உறுதி அளித்ததாகவும், தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம் என்றும் செங்கல்பட்டு தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தியை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது. பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது. ஜிஎஸ்டி நிலுவையை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் கச்சத்தீவை மீட்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம் எனவும் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் உறுதி அளித்தார் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது.
ஜிஎஸ்டி நிலுவையை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், செங்கல்பட்டு தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தியை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது என்றும் பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது என்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக பிரதமரை சந்திக்க உள்ளார் மு.க.ஸ்டாலின். பிரதமர் மோடியிடம் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்குகிறார், மேலும், நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், எய்ம்ஸ், ஜி.எஸ்.டி குறித்தும் பிரதமருடன் ஆலோசிக்க வாய்ப்பு
பாலியல் சர்ச்சையில் கைதான சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லியில் கைது செய்யப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. தற்போது நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 3.34 லட்சம் டன் நெல் சேமிக்க முடியும் என்றும் தகவல் அளித்துள்ளது.
ஈரோடு பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “நீர் நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்றும், நீர் நிலைகளை சிதைக்காமல் காக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழக நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய மேலும் 3 வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 குறைந்து ஒரு சவரன் ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரியலூரில் ஆய்வுக் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், “அண்மையில் தமிழகமுதல்வர் 'தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாதென பிரதமருக்கு மடல் எழுதினார். ஆனால்,ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூரில் ஆய்வுக்கிணறுகள் அமைக்க தமிழ்நாடுஅரசிடமே சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வரும் 21ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நாளை கொரோனா சோதனை நடைபெறும் என்றும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெங்களூரு, மும்பை, சென்னை உள்ளிட்ட மேலும் 9 நகரங்களில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைக்கும் என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஐதராபாத்தில் மட்டும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.
விழுப்புரத்தில் சி.சண்முகம், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தொடர்ந்து மதுரையில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற அவர் அதிமுகவை பற்றி பேச தகுதியற்றவர் என்று விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் பேச்சு.
காணாமல் போன கோவில் சிலைகள் மற்றும் நகைகளை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கோவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களாக அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. 10 நாட்களுக்குள் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு முன்னறிவிப்பின்றி மின் தடை இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆசிரமம், ஆடம்பரமாக இருக்கும் சாமியார்கள் யாரும் சாமியார்கள் கிடையாது. அனைத்தும் மதத்தின் பெயரால் நடைபெறும் பித்தலாட்டங்கள். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று நடிகர் மயில்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. மேலும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல இடங்களில் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் ஒரே நாளில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
யுட்யூபர் மதன் வெளியிட்ட வீடியோக்களை கேட்டுவிட்டு வந்து வாதிடுமாறு, அவருக்காக ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மதன் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு
டெல்டா மாவட்டங்களில் நெல் விவசாயம் செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ. 61.09 கோடி மதிப்பிலான குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர். இதனால் 2.7 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மீதான மனு தொடர்பாக விசாரித்த நீதிமன்றம் கேள்வி.
காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார் முக ஸ்டாலின். இதற்கு மத்தியில் முக ஸ்டாலின் நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி சென்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின் தற்போது டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். பிறகு சில திமுக எம்.பிக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. நிலுவை தொகை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கொரோனா தடுப்பூசி போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இன்று மாலை 1 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு அவர் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்.
கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. இணையவழி முன்பதிவுக்கான மொபைல் செயலி இயங்காததால், மதுக்கடைகளை திறக்க கேரள அரசு அனுமதி.
நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக 19ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். மத்திய அரசு அனுமதி தந்ததையடுத்து தனி விமானத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
'தொரட்டி' படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு, கொரோனா தொற்றால் உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து ரூ.36,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.62 குறைந்து ரூ.4,515க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்றடைந்தார்.
திருமணத்துக்காக மண்டபங்களை பதிவு செய்தால், மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி இணையத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தியாவில் மேலும் 67,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 2,330 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் மேலும் 1,03,570 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
நீட் நுழைவுத் தேர்வு பாதிப்புகள் குறித்து தமிழக மக்கள் [email protected]ல் கருத்து கூறலாம். வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம் என ஏ.கே.ராஜன் குழு அறிவித்துள்ளது.