உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி கட்சிகள் வார்டுகள் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், வார்டுகளில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உயர் நீதிமன்றம் டிசம்பர் 2019-க்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில், அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுக்களைப் பெறுவதாக தெரிவித்தது. அதே போல, பாஜகவும் காங்கிரசும் திமுகவும் அறிவித்தது.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் மேயர் பதவியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த வாரம், தமிழக அமைச்சரவை, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் இல்லை என்றும் இந்த பதவிகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களால் அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புத்தலுடன் அமலுக்கு வந்தது.
இந்த அவசரச் சட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளும் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக மேயர் உள்ளிட்ட பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தோல்வியடைந்துவிடுவார்கள் என்ற பயத்தில்தான் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் கொண்டுவந்துள்ளதாக விமர்சனம் செய்தார்.
இதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
உள்ளாட்சி அமைப்புகள் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
உள்ளாட்சி அமைப்பில் தலைமைப் பதவிவகிப்பவர்களை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும்முறை உறுப்பினர்களின் குதிரை பேரத்திற்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், அரசியல் கட்சிகள் அவரவர் பலமாக உள்ள இடங்களில் முடிந்தவரை அதிக இடங்களைப் பெறுவதற்கான உத்திகளை வகுத்து வருகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெள்ளிக்கிழமை மாவட்டக் அமைப்புகளுக்கு அனுப்பிய அறிக்கையில், ஆளும் கட்சி தேர்தலைத் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலக் குழு குற்றம் சாட்டியது.
இடங்களைப் பகிர்வது தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான மாநிலக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் திமுக தலைமையுடன் நாங்கள் கலந்துரையாடினோம். ஆனால், தி.மு.க தலைமை தேர்தல் நடத்தப்படுவது குறித்து பெரும் சந்தேகங்களை வெளிப்படுத்தியது.தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால் மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சியை அணுகுமாறு கூறப்பட்டுள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் பல்வேறு மட்டங்களில் வெற்றிபெறக்கூடிய இடங்களின் பட்டியலை தயாரிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது மாவட்டக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில், கூட்டணிக் கட்சிகளில் எதிர்ப்பாளர்களை எதிர்கொண்டது. சில நேரங்களில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்ட வார்டுகளில் போட்டியிட கட்சிகளே தங்கள் செயல்பாட்டாளர்களை ஆதரித்தன.
ஜெயலலிதா காலமானவுடன், அதிமுகவின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தலைவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் கட்சிக்குள் ஒரு பகுதியினர் தேர்தலில் தனியாக செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் என்று பாஜக தரப்பில் கூறுகின்றனர்.
இதன் மூலம், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணியில் உள்ள கட்சிகள் வார்டு பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டன என்று தெரியவந்துள்ளது.