MNM Candidate Suicide Update : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 44 வாக்குகள் பெற்றதால் விரக்தியடைந்த திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 19 ந்தேதி நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 22-ந் தேதி எண்ணப்பட்டது. இதில் தமிழகம முழுவதும் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர். வெற்றி பெறாத நிலையில், சில இடங்களில் குறைந்த அளவிலான வாக்குகளையே பெற்றிருந்தனர். அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சியில், 36-வது வார்டில மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மணி என்பவர் போட்டியிட்டுள்ளார்.
திருப்பூர் கல்லூரி சாலை உள்ள கொங்கணகிரி பகுதியை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், 36 வது வார்டில் தனக்கு செல்வாக்கு உள்ளது கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று சொல்லி, தேர்தல் செலவுக்காக சுமார் 50, ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மணி வெறும் 44 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
தான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கொண்டிருந்த மணிக்கு இந்த ஏமாற்றம் மிகுந்த மனஉலைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரக்தியுடன் இருந்து வந்த மணி, தேர்தல் செலவுக்காக வாங்கிய பணத்தை எப்படி திரும்ப கொடுப்பது என்று தெரியாமல் இருந்துள்ளார். மேலும் இந்த தேர்தல் தோல்வி தொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மணி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேர்தல் தோல்வியால் வேட்பாளர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil