Tamilnadu Political News Update : தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில தனித்து போட்டியிடுவதாக என்று பாமக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பாமக தனித்து போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் பாமக தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது.
இதில் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தாலும், சட்டமன்ற தேர்தலில் சில இடங்களில் பாமக வெற்றி பெற்றது. அதிமுக இந்த தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தாலும் பாமகவின் வெற்றி பெரிதாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலிலும் பாமக அதிமுக கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக தலைவர் ஜி.கே.மணி தற்போது வெளியிட்டுள்ள அறிகையில் 9 மாவட்டங்களுக்காக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதன்படி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமராஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 15 மற்றும் 16-ந் தேதிகளில் இநத தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், தற்போது தனித்து போட்டியிடும் பாமகவின் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் காணொலி கட்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்றும், பாமகவால் கூட்டணி கட்சிகள் பலனடைந்துள்ளன என்றும் கூட்டணி கட்சிகளினால் பாமகவுக்கு எந்த பலனும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அதிமுகவில் சரியாக தலைமை இல்லை எனவும், தற்போதுள்ள தலைமையின் உத்தரவை மதித்து அதிமுக தொண்டர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றது பாமகவுக்குத்தான் இழப்பு என்று கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாமக விலகியது எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. அவர்களுக்குத்தான் பெரிய இழப்பு. கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. கூட்டணியில் இருந்து விலகுவது என்பது அவர்களின் உட்கட்சியினர் எடுத்து முடிவு. அதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் அதிமுகவின் தலைமை பற்றியும், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து விமர்சிக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மீண்டும் அவர்கள் விமர்சனம் செய்தால், நாங்களும் விமர்சனம் செய்யும் நிலைக்கு வருவோம் என்று கூறியுள்ளார்.
மேலும் யாருடைய கட்டாயத்தில் பேரில் அவர்கள் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. எழுதப்படாத விதி போல அவர்கள் இந்த முடிவு எடுத்திருக்கலாம். அது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது என்றும் கூறிய அவர், விமர்சனங்களை தாண்டி வெற்றிபெவோம் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil