Tamil News Update : சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ரூ .6.39 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் சென்ற லாரி நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் கர்நாடகா-ஆந்திரப் பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள நேராலஹள்ளி என்ற இடத்தில் மர்மநபர்கள் சிலரால் கடத்தப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில் இருந்து செயல்படும் கொள்ளை கும்பல்கள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் வெளியான தகவலின்படி, சுரேஷ் பாபு என்ற லாரி டிரைவர், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை சென்னைக்கு அருகிலுள்ள செல்போன் உற்பத்தி ஆலை பிரிவில் இருந்து 7,500 மொபைல் போன்களுடன் பெங்களூரு தெற்கில் உள்ள ஹோஸ்கோட்டேவில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கிற்கு மொபைல் போன்களை மறுவிநியோகம் செய்ய லாரியில் கிளம்பியுள்ளார்.
இதில் பெங்களூருவில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள நேராலஹள்ளி லாரி சென்றபோது, காரில் வந்த கும்பல் லாரியை வழி மறித்து டிரைவரை சராமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் மயங்கிய நிலையில், மர்ம கும்பல் லாரியுடன் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். சில மணி நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த டிரைவர், பிரதான சாலைக்கு உதவி கேட்டுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் காலி லாரியை கண்டுபிடித்தனர்.
இதே போல் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ .15 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் சென்ற தமிழக லாரியை கிருஷ்ணகிரியில் மடக்கிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாலான நபர்கள் ஜாமீனில் வெளியே வந்திருப்பதால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்திருப்பதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். இது குறித்து டிரைவர் சுரேஷ்பாபு, பெங்களூரு முல்பாகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபர்களைக் கண்டறிய ஒரு சிறப்பு குழு அமைச்சப்பட்டுள்ளதாக கோலார் காவல்துறை கண்காணிப்பாளர் டி கிஷோர் பாபு தெரிவித்துள்ளார். மேலும் ம.பி கும்பல் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆனால் அது வேறு கும்பலா அல்லது கிருஷ்ணகிரி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களாக என்பது எங்களுக்கு தெளிவாக விபரங்கள் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த கும்பலை பிடிக்க கர்நாடக மாநிலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தமிழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.