மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதி நான்தான் : சர்ச்சையை ஏற்படுத்திய நித்யானந்தா பதிவு

Tamil News Update : மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதி நான்தான் என்பதை குறிப்பிடும் வகையில் நித்யாநந்தா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

Madurai Aadhinam Nithyanantha Post : தமிழகத்தின் மிக தொன்மையான சைவசமய திருமடங்களில் ஒன்று மதுரை ஆதினம். 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்மந்தரால் தொடங்கப்பட்ட இந்த ஆதினத்தில் தற்போது 292-வது மடாதிபதயாக அருணகிரி நாதர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருணகிரி நாதர் சுவாசக்கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மதுரை ஆதினத்தில் 293-வது மடாதிபதி நான்தான் என்று நித்யானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் வைரலாகி வருகிறது.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்யானந்தா பெங்களூருவில் ஆசிரமத்தில் பெண்களிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நித்யானந்தா திடீரென தலைமறைவானார். தற்போது அவர் தென்அமெரிக்க கண்டத்தில் ஒரு தீவில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது நித்யானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதி நான்தான் என்று கூறியுள்ளார்.  தற்போதைய மடாதிபதி அருணகிரிநாதர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ள நித்யானந்தா தன்னை 293-வது மடாதிபதியாக குறிப்பிட்டுள்ளார். மேலும். மதுரை ஆதினத்தின் எல்லா பொறுப்புகளும். உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும், ஆன்மீக ரீதியான மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் உள்ளிட்ட பாரம்பரிய உரிமைகளை தான் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்தார். இந்த பதிவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, 2012-ம் ஆண்டு இறுதியில் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் நித்யாநந்தா இளைய மடாதிபதியாக அறிவித்து பின்னர் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது தொடர்பான வழங்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கில் நித்யானந்தா தன்னை 293-வது மடாதிபதியாக குறிப்பிட்டு ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த ஆவணங்கள் முறைகேடாக தயார் செய்யப்பட்டது என்று மதுரை ஆதினம் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது 293-வது மடாதிபதி என குறிப்பிட்ட நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மதுரை ஆதினம் தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu madurai aadhinam nithyanandha facebook post viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com