Tamilnadu Madurai Aiims Hospital Update : தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தயாராகும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் தோப்பூரில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது குறைந்தது 4 வருடங்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு காரணமாக இந்த பணி தாமதமானதாக கூறப்பட்டது. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்று எதிர்கட்சியினர் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பிரச்சாரம் செய்தது பெரும் வைரலாக பரவியது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மதுரை உட்பட பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் எய்ம்ஸ் திட்டங்களின் நிலை குறித்து மத்திய சென்னை மக்களவை திமுக எம்பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மதுரையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் இல்லாத நிலையில், எம்.பி.பி.எஸ் வகுப்புகள் தொடங்குவதற்கு ஆய்வக வசதிகள், விடுதி வசதி உள்ளிட்ட போதிய வசதிகளுடன் கூடிய தற்காலிக வளாகத்தை கண்டறிய தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில், மதுரை "எய்ம்ஸ் தமிழ்நாட்டின் மதிப்புமிக்க திட்டம். பிரதமர் நரேந்திர மோடியே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்," என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பதிலின் அடிப்படையில் எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் தெரிவித்தார், மேலும் 26-ல்தான் எய்ம்ஸ் மருதுவமனையின் கட்டுமானப்பணிகள் முடிவடையும் என்றால், தற்போது எய்ம்ஸ் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சொந்த கட்டிடம் இல்லாமலேயே தங்களது படிப்பை முடித்தவிடுவார்கள்.
சொந்த கட்டிட அமைப்பு இல்லாமல் இருந்தால் மருத்துவ கல்லூரி அங்கிகாரத்தையே கவுன்சில் ரத்து செய்துவிடுகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இரவல் கட்டிடத்தில் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கிறதா என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த மத்திய சுகதாரத்துறை அமைச்சர், அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் கொடுக்கப்படும் என்றும், அதனைத்து எய்ம்ஸ் மாணவர்களும் படிக்கும் இரவல் கட்டிடம் அரசுக்கு சொந்தமானது என்று விளக்கம் அளித்தார். மேலும் மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்காக ஜப்பான் நிறுவனத்திடம் கடனுதவி பெறப்படுவதாகவும், நிதியை பெற சில நடைமுறைகள் உள்ளதால், காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் பாரதி பவார் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil