குடியரசு தினத்தையொட்டி, மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, தீவிர பரிசோதனைக்கு பின் வாகனங்கள், பயணிகளை அனுமதிக்கும் பணிகள் நடக்கின்றன.
குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்திற்கு நேற்று முதல் ஜன.31ம் தேதி வரை 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விமான நிலைய உட்பகுதி, ஓடுபாதை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களில், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் வெளிப்பகுதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் மதுரை மாநகர போலீசார் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், வாயிலாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க அதிவிரைவு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன.
குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்தில் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே, பயணியர் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்கின்றனர். பயணியரை வழியனுப்ப வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.