கழகங்கள் இல்லாத தமிழகம் கவலைகள் இல்லாத தமிழர்கள் என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து புதிய முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் இந்த இரு கட்சிகளும் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்வதும் தேர்தல் முடிவுகள் வந்ததும் அது குறித்து மாறி மாறி குறை கூறி வருவதும் தொடர்ந்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து கூட்டணி இருந்து வருகிறது.
சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட பாஜக அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக ஐ.டி.விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மேலும் பாஜக ஐ.டி. விங்கில் இருந்த பலரும் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். ஆனால் இது கூட்டணி கட்சிக்கு அதிமுக செய்யும் துரோகம் என்று பாஜக நிர்வாகிகள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியதாக தகவல் வெளியானது. அதேபோல் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதையும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுக தான் முடிவு செய்யும் என்று அதிமுகவின் ஒ.எஸ் மணியன் கூறியிருந்தார்.
அதேபோல் கூட்டணி குறித்து பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதனிடையே நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியலுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். கூட்டணி குறித்து முடிவு செய்ய எனக்கு அதிகாரமில்லை. கட்சியின் மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் அண்ணாமலைக்கு ஆதரவாகவும், திராவிட கட்சிகளை விமர்சித்தும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கழகங்கள் இல்லா தமிழகம், கவலைகள் இல்லாத தமிழர்கள், உங்களோடு ரத்தம் சிந்த உண்மையான கூட்டம் உண்டு, எங்கள் அண்ணாவே, எடப்பாடி பதறட்டும், கோபாலபுரம் கதறட்டும். இவர் திராவிட அண்ணா இல்லை, சங்கிகளின் அண்ணா” என வாசகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திராவிட கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil