தமிழகம் முழுவதும் கோவில் பெயர்களில் உள்ள போலி இணையதளங்களை முடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த இணையதங்களை இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபலமான பெரும்பாலான கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களில் பெயர்களில் போலி இணையதளங்களை தொடங்கிய பக்தர்களிடம், காணிக்கை, மற்றும் நன்கொடை வசூல் செய்வதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, இந்த மாதிரியான போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என்று கோரி, ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் கோவில் பெயர்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமான போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போலி இணையதளங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் குறித்து சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து, இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து இது போன்ற போலி இணைதளங்கள் குறித்து புகார் அளிக்க தனி அலுவலரையும், அதற்கான தொலைபேசி எண்ணையும் உருவாக்க வேண்டும் என்றும், போலி இணையதளங்கள் குறித்து புகார் வந்தால் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்று போலி இணையதளங்களை இயக்குவோர் மீது, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதொடு சைபர் கிரைம் போலீசார், சுழற்சி முறையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் நடைபெறும் செயல்பாடுகளை முறைப்படுத்த இந்து அறநிலையத்துறை ஆணையர் உறுதி அளிக்க வேண்டும். திருப்பதி, மற்றும் சபரிமலை கோவில்கள் போன்று தமிழகத்தில் உள்ள கோவில்களின் செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/