/indian-express-tamil/media/media_files/2025/08/14/police-mna-2025-08-14-22-24-16.jpg)
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமானம், ரயில் நிலையங்களில் பலத்த சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாடு முழுவதும் 79ஆவது சுதந்திர தினவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரையில் ரயில் நிலையம், மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோவில் மற்றும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையம் வரும் பயணிகளை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர பரிசோதனை செய்த பிறகே அனுமதித்து வருகின்றனர். தண்டவாளங்களில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மீனாட்சியம்மன் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறுகையில், ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை நகரம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 2 ஆயிரம் போலீசார் இன்று மாலை முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்’ என்றார்.
மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விமான நிலைய வளாகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் பயணிகளை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர். விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் 17ம் தேதி வரை விமான நிலையத்துக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிநவீன வெடிகுண்டு கண்டுபிடிப்பு சாதனம் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.