குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில, மதுரையைச் சேர்ந்த வேலு ஆசான் என்ற பறை இசை கலைஞருக்கு மத்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது .
குடியரசு தின விழாவை முன்னிட்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெறும் பெயர் பட்டியலை வெளியிட்டார். இதில் பத்மஸ்ரீ விருது மதுரை மாவட்டத்தை சேர்ந்த வேலு ஆசான் என்ற பறை இசை கலைஞருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த வேலு ஆசான்?
ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் பெற்ற மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். பறை இசையில், அசத்தி வரும் இவரை பலரும் வேலு ஆசான் என்று அழைத்து வருகின்றனர். சிறுவயதில் இருந்து பறை இசையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கல்வியில் நாட்டம் இல்லாத வேலு ஆசான், தனது தந்தையிடம் இருந்து பறை இசை பற்றிய அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார்.
தனது தந்தையை தொடர்ந்து அவரது நண்பரான சேவுகன் வாத்தியார் என்பவரிடம் பறை இசையின் நுணுக்கங்களை தெரிந்துகொண்ட வேலு ஆசான், அதை திறம்பட கற்றுக்கொண்டுள்ளார். தன்னோடு இருப்பவர்கள், பறை இசையை தொழிலாக பார்த்த நேரத்தில், அதை ஒரு கலையாக உணர்ந்து கற்றுக்கொண்ட இவர், தான் மட்டுமல்லாமல், தன்னை சுற்றி உள்ள அனைவருக்கும் இந்த கலையின் நுணுக்கங்களை கற்றுகொடுத்துள்ளார்.
இந்த தலைமுறை மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறையும் பறை இசை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்த வேலு ஆசான் தற்போதுவரை அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.