மதுரை சித்திரை திருவிழாவில், காவல்துறை சார்பில் பறக்கவிட்ட ட்ரோன் கேமராக்களை பிடிக்க முயன்ற இளைஞர்களுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை அளித்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் தென் பகுதியில் முக்கிய இடமாக இருக்கும் மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவை பார்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருவது உண்டு. இந்த சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும்.
அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரையில் தொடங்கிய நடப்பு ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொண்டாட்டத்தில் இன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூறியிருந்த நிலையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்காணிப்பு பணிக்காக காவல்துறை சார்பில் ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடம் அருகே கூறியிருந்த சில இளைஞர்கள் காவல்துறையினரின் ட்ரோன் கேமராக்களை பிடிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் அந்த இளைஞர்களை தனியாக அழைத்து தவளை போன்று குதிக்க சொல்லி நூதனமுறையில் தண்டனை கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவை புதிய தலைமுறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் காவல்துறையினரின் இந்த செயலுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“