மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரயில் நிலையத்தில், பிரதான நுழைவு வாயில் அடைக்கப்பட்டு, மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் பகுதியில் முக்கிய மாவட்டமாக இருக்கும் மதுரையில், உள்ள ரயில் நிலையம், ரூ347 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், புதிய கட்டிடம் கட்டுவதற்காக, தற்போது கிழக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இதன் காரணமாக, மதுரை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் (கிழக்கு) வரும் 11ம் தேதி மாலை 3 மணி முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதற்கு பதிலாக பயணிகளின் வசதிக்காக தற்போது உள்ள பயண சீட்டு பதிவு அலுவலகம் அருகே மாற்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நுழைவு வாயில் மூலமும் முதல் நடைமேடைக்கும், மற்ற நடைமேடைகளுக்கும் எளிதாக செல்ல முடியும்.
இது சம்பந்தமாக உரிய அறிவிப்பு பலகைகளும், வழி காட்டும் விளம்பரங்களும் வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“