மதுரை திருமங்கலம் கொடிமர தெருவில் நேற்று இரவு 7 மணி அளவில் அந்த தெருவில் வசித்து வரும் அல்லீமா என்பவரது 4 வயது சிறுவன் வீட்டிலிருந்து வெளியில் சென்ற போது அவ்வழியாக சென்ற தெரு நாய் திடீரென சிறுவன் மீது பாய்ந்து கடித்து குதறியது. நாய் கடித்ததால் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த அப்பகுதி மக்கள் நாயை அடித்து துரத்தி சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காயம் அடைந்த சிறுவனை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துவர பட்டான். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசி டிவி கேமராவில் பதிவாகி இருந்தது சிறுவனை நாய் கடித்து குதறிய நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், தினந்தோறும் 15க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகிறது. இதனால் பெண்கள் குழந்தைகள் தெருவில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும் நாய்களை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் எனவும். கோரிக்கை வைத்துள்ளனர். திருமங்கலம் பகுதியில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் கடந்த மூன்று மாதத்தில் 500க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.