நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனம் விருப்ப ஓய்வு அளித்துள்ளதால், அங்கிருந்து வெளியேறிய தொழிலாளர்கள் கண்ணீர் மல்க பாடிய ஒரு பாடல் பலரையும் கலங்க வைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் அமைந்துள்ள இடம் மாஞ்சோலை. மணிமுத்தாறு அணையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி, இந்தியா சுதந்திரத்திற்கு முன் சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் இருந்துள்ளது. அப்போது அவர் மும்பையை சேர்ந்த பாம்பே டிரேட்டிங் கார்ப்ரேஷன் என்ற நிறுவனத்திற்கு 100 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளார்.
1929-ம் ஆண்டு முதல் 2028-ம் ஆண்டு வரை இந்த குத்தகை காலம் செல்லுபடியாககும். இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்த இந்நிறுவனம், இங்கு, காபி, தேயிலை, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட பணப்பயிற்களை பயிர ஏதுவாக, கடடு முரடாக இருந்த இந்த நிலத்தை சரி செய்ய, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து பணியமர்த்தியுள்ளனர். மொத்தம் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் எப்போதும் பசுமையாகவே காட்சியளிக்கும்.
அதேபோல் வருடத்தில் 6 மாதம் வெயில் 6 மாதம் மழை பெய்யும் என்றாலும் மாஞ்சோலை எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். இந்த பகுதியில், காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட சில தேயிலை தோட்டங்களும் அடங்கியுள்ளன. 2000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த இந்த மாஞ்சோலை எஸ்டேட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு ரூ450 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஊதியம் குறைவு தான் என்றாலும், சுத்தமான காற்று, தண்ணீர் என இதர வசதிகளை பார்த்த பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் வேலை செய்து வந்துள்ளனர்.
5 தலைமுறைகளாக இந்த தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில் தற்போது சுமார் 500-க்கு அதிகமானோர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, மாஞ்சோலை இடத்திற்கான குத்தகை முடிய இன்னும் 4 வருடங்கள் உள்ள நிலையில், ஜமீன் நில ஒழிப்பு திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசு, மாஞ்சோலை எஸ்டேட்டை கையப்படுத்த முயற்சித்தது. ஆனால் மும்பையை சேர்ந்த அந்நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்று குத்தகை காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அதுவரை நிலத்தை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியது. அதன்படி குத்தகை காலம் வரை நிலத்தை பயன்படுத்திக்கொள்ளவும், வரும் 2028-ம் ஆண்டு நிலத்தை அரசு கையகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்
நிலத்தை அரசிடம் ஒப்படைக்க இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில், தற்போது மாஞ்சோலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு அந்நிறுவனம் விருப்ப ஓய்வு அளித்துள்ளது. அவர்களுக்கு ஊதிய பணம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் ஊழியர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கிருந்து கண்ணீருடன் வெளியேறிய மக்கள் ‘’பசுமை நிறைந்த நினைவுகளே, பாடி திரிந்த பறவைகளே’’ என்ற பாடலை பாடிக்கொண்டே சென்றுள்ளனர்.
இந்த பாடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பார்ப்பவர் கண்களை கண்ணீரில் மூழ்கடிக்கும் வகையில் இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“