திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குடியிருக்கும் பர்மா காலனி, திடீர் நகர், காவேரி நகர், ஆகிய பகுதிகளில் சுமார் 315 வீடுகளில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
தற்போது இந்த மக்கள் குடியிருக்கும் பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்றும், இக்குடியிருப்புகளை காலி செய்ய சொல்லி அப்பகுதியில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு பலகையை வைத்துள்ளது.
ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு, அப்பகுதியில் குடியிருந்து வரும் மக்கள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து வரும், நிலையில் இவர்களுக்கு ஆதரவாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவெறும்பூர் கடைவீதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர். ரவிக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள். ஜாகீர், சந்தோஷ், சங்கர், பாண்டியன், தினேஷ், தமிழ்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், செயலாளர் சேதுபதி, விவசாய சங்க மாநகர் தலைவர் கே சி பாண்டியன், நித்யா, முருகேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடவர்கள் கூறுகையில், திருவெறும்பூர் பர்மா காலனி, திடீர் நகர், காவேரி நகர், பகுதிகளில் 4 தலைமுறையாக 315 வீடுகளில் உள்ள குடியிருப்போரை அகற்றும் முடிவை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். ரயில்வே விரிவாக்கத்திற்கு காலியிடங்களை பயன்படுத்த வேண்டும், குடியிருக்கும் வீடுகளை எடுக்கவும், இடிக்கவும் கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறேன் என்ற பெயரில் மக்களின் வாழ்விட உரிமையை பறித்து நடுத்தெருவில் நிறுத்தக்கூடாது, இதை மீறி செயல்படும் ரயில்வே துறையின் அடாவடித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம் எனப்பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டவாறு ஊர்வலமாக கடைவீதியில் வந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்