/indian-express-tamil/media/media_files/2025/10/11/supreme-court-pronounce-orders-tvk-petition-independent-investigation-karur-stampede-on-monday-october-13-tamil-news-2025-10-11-18-32-48.jpg)
திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே சிறப்பு விரைவு ரயில்கள்: தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அக்.21,22 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06156) பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்:06155) செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில், திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டு சென்றடையும்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும் பரிசல்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Oct 11, 2025 19:19 IST
சாத்தனூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 6,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Oct 11, 2025 19:17 IST
கரூர் சம்பவத்தில் அக்டோபர் 13-ல் தீர்ப்பு - உச்சநீதிமன்றம்
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகளில் வரும் அக்டோபர் 13-ந் தேதி (நாளை மறுநாள்) தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது, கரூர் சம்பவத்தில் எஸ்.ஐ.டி (SIT) அமைத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து த.வெ.க தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மற்றும் சி.பி.ஐ விசாரணை கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை திங்கட்கிழமை வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
- Oct 11, 2025 18:19 IST
சாத்தனூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 6,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- Oct 11, 2025 17:57 IST
விக்கிரவாண்டி: 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு
விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடுர் மற்றும் வழுதாவூரில் 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுக் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்ததுள்ளன.
- Oct 11, 2025 17:21 IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு - த.வெ.க. மா.செ-வுக்கு அக்.14 வரை சிறை
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக மதியழகனை சிறப்பு புலனாய்வுக் குழு 2 நாட்கள் காவலில் விசாரித்தது. 2 நாள் விசாரணை முடிந்து கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி ஆஜர்படுத்தியது. இந்நிலையில், வருகிற 14 ஆம் தேதி வரை த.வெ.க. நிர்வாகி மதியழகனை சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Oct 11, 2025 16:42 IST
திருவாரூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த தமிழ்ச் செல்வி (45) என்பவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
அவரது உடலுக்கு திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
- Oct 11, 2025 16:41 IST
சிவகாசி அருகே கன்னிசேரி புதூர் சாலையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து
சிவகாசி அருகே கன்னிசேரி புதூர் சாலையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடிகள் வெடித்துச் சிதறுவதால் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
- Oct 11, 2025 15:24 IST
கரூர் சம்பவம் - தவெக நிர்வாகி மதியழகன் நீதிமன்றத்தில் ஆஜர்
விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி மதியழகன் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர். சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணைக்கு பின் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மதியழகன் ஆஜர்படுத்தப்பட்டார்
- Oct 11, 2025 14:46 IST
தீபாவளியையொட்டி கடைகளில் அலைமோதும் மக்கள்- முக்கிய இடங்களில் போலீஸ் அணிவகுப்பு
விருத்தாசலம் பகுதியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் விருத்தாச்சலம் உட்கோட்டம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் கவாத்து பயிற்சி நடைபெற்றது. பின்னர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நகர மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விருதாச்சலம் எஸ்.பி.ஐ வங்கி, பாலக்கரை,பேருந்து நிலையம்,கடைவீதி தென்கோட்டை வீதி ஆகிய இடங்களில் கொடி அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.
- Oct 11, 2025 14:41 IST
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Oct 11, 2025 12:55 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் வழங்கும் அலுவலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
- Oct 11, 2025 12:29 IST
ஒத்தச்சேரி ஊரின் பெயரை மாற்றி தீர்மானம்
மதுரை மேலூர் ஒன்றியத்திலுள்ள ஒத்தச்சேரி என்ற பெயரை ஒத்தப்பட்டி என மாற்றி, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாத்தமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- Oct 11, 2025 12:17 IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
- Oct 11, 2025 11:57 IST
மூடப்பட்ட நெல்லை கல்லூரியில் நாளை வழக்கம் போல வங்கித் தேர்வு
நெல்லை மேலத்திடியூர் தனியார் கல்லூரியில் எலிக்காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், சுகாதாரத் துறையின் அனுமதியுடன் வங்கித் தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். தேர்வுப் பகுதிகளைச் சுத்தம் செய்யக் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- Oct 11, 2025 11:40 IST
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்
கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது.
- Oct 11, 2025 11:37 IST
ஓசூர்: கனமழையால் போக்குவரத்து பாதிப்பு
ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால், அட்டகுறுக்கி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி போக்குவரத்து பாதித்துள்ளது.
- Oct 11, 2025 11:04 IST
பச்சமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக வரவழைக்கப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவைச் சரிசெய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
- Oct 11, 2025 09:45 IST
தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்.27-ல் உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரத்தையொட்டி அக்.27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசுப் பணியாளர்களுக்குப் பொருந்தாது எனவும் ஆட்சியர் இளம்பகவத் விளக்கம் அளித்துள்ளார்.
- Oct 11, 2025 09:20 IST
மகாமகக் குளக்கரையில் மாடு முட்டி தாய், குழந்தை காயம்
கும்பகோணம் மகாமக குளக்கரையில் கடந்த வியாழக்கிழமை மாடு முட்டி மூதாட்டி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், நேற்று மீண்டும் அதே பகுதியில் மாடு முட்டி தாயும், குழந்தையும் காயமடைந்தனர். ரேவதி என்பவர் மாடு முட்டி நிலைதடுமாறி விழ, கையிலிருந்த குழந்தைக்கும் தலையில் அடி பட்டது. இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதேபோல், ரயில் நிலையம் அருகேயும் பைக்கில் சென்ற ஒருவர் மாடு முட்டி காயமடைந்துள்ளார். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கோ சாலையில் அடைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Oct 11, 2025 09:15 IST
கரூர் சம்பவம்: முன்ஜாமின் கோரி ஆனந்த் மீண்டும் மனு
கரூர் த.வெ.க பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். முதல் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
- Oct 11, 2025 09:15 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று முதல் அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Oct 11, 2025 09:15 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Oct 11, 2025 09:14 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,540 கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,033 கன அடியில் இருந்து 29,540 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடியும் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 112.48 அடியாகவும் நீர் இருப்பு 81.98 டி.எம்.சி உள்ளது.
- Oct 11, 2025 09:11 IST
நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.