சீர்காழி பாலியல் வன்கொடுமைக்கு சிறுமி தான் காரணம்: சர்ச்சை பேச்சால் மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

ஆட்சியர் மகாபாரதியின் கருத்துக்கு, பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Mahabharathi

சீர்காழியில், அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறுவனதால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், அந்த குழந்தையே தவறாக நடந்துகொண்டுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மூன்றரை வயது பெண் குழந்தை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்துள்ளார். இந்த சிறுமி, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு, விட்டு வெளியே வந்த அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான 16 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி கொடுத்து தனியே அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளான். இதனால் சிறுமி சத்தம்போட்டு அழுததால் அதிர்ச்சியடைந்த சிறுவன், சிறுமியை கல்லால் தலையில் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு, ஒரு கண் சிதைந்த நிலையில் மயக்கமாகி கிடந்துள்ளார். அங்கன்வாடி சென்ற குழந்தை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் குழந்தையை தேடியபோது, குழந்தை மயங்கி கிடந்த விஷயம் தெரியவந்துள்ளது.  இதனையடுத்து சிறுமியை மீட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிகிச்சைக்காகசீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், குழந்தையின் இந்த நிலைமைக்கு காரணமான அந்த 16 வயது சிறுவனை கைது மகளிர் போலீசார் நீதிபதி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இதனிடையே மயிலாடுதறையில் இன்று நடைபெற்ற, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.

Advertisment
Advertisements

இந்த நிகழ்ச்சியில் பேசிய, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையே தப்பாக நடந்திருக்கிறது, எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி, அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியது தான் இந்த சம்பவத்திற்கு காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும் என்று ஆட்சியர் மகாபாரதி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஆட்சியர் மகாபாரதியின் கருத்துக்கு, பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை (மார்ச் 1) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகதை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. ஆட்சியரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆட்சியர் மகாபாரதி எங்கு, எந்தத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

ஆட்சியரின் பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம் என்று பதிவிட்டுள்ளார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: