ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உயர்நிலைக் குழுத் தலைவர் நிதின் சந்திராவுக்கு வைகோ அனுப்பிய கடிதத்தில்,
“1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகள் கலைக்கப்பட்டன, புதிய மாநிலங்கள் உருவாக்கம் ஆகியன உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்போது ஆந்திரப் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே சட்டமன்றத் தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இப்படி ஒரு முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. ஆளும் கட்சிகள் தேர்தல்களில் கவனம் செலுத்துவது குறைந்து, ஆட்சியிலும் நலத்திட்டங்களிலும் கவனம் செலுத்த முடியும் என்பன போன்ற வாதங்கள், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றன. இந்த வாதங்களில் நியாயம் இருந்தாலும், இதுவரை இதற்கான உறுதியான சான்றுகள் இல்லை.
உண்மையில், தேர்தல் நடத்துவதை வெறும் செலவுப் பிரச்சினையாகச் சுருக்கிவிட முடியாது. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போது சில மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவாகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதம் புறக்கணிக்கத்தக்கது அல்ல.
மேலும், இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என மூன்று அடுக்கு அரசாட்சி அமைப்பு நிலவுகிறது. ஒரே நேரத்தில் இவை அனைத்துக்கும் தேர்தல் நடத்துவது இந்த அடுக்குகளுக்கு இடையிலான சமநிலையைப் பாதிக்கக்கூடும். அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இசைவானதாக சட்டமன்றங்களின் ஆயுள் காலம் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்குமா என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுவதிலும் நியாயம் இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவையின் காலம் ஐந்து ஆண்டுகள். அதேநேரம், அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி ஆளுநரும் ஆட்சியைக் கலைக்கலாம். ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது என்பது, மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. இந்தத் திட்டத்துக்காக அரசைக் கலைத்தால், தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம். எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.