ஆவினில் எந்த ஒரு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது அரசுக்கு மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆவடி நாசர், மனோ தங்கராஜ் ஆகியோரே நேரடி சாட்சியாகும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்கும் நிலையில் 6 அமைச்சர்களில் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 3 அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பால்வளத் துறையின் புதிய அமைச்சராக ராஜ கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2021ல் தி.மு.க அரசு பொறுப்பேற்றப்போது ஆவடி சா.மு. நாசர் பால்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, ராஜ கண்ணப்பன் பால் வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சர்கள் மாறி மாறி வருகின்றனர். ராஜ கண்ணப்பன் ஆவது தொடர்ந்து நீடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;
”கடந்த 40 மாதங்களில் தி.மு.க அமைச்சரவையில் மூன்று முறை அமைச்சர் மாற்றப்பட்ட ஒரே துறை பால்வளத்துறை மட்டுமே.
ஏனெனில் மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தி, கொள்முதல், பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆவின் நிர்வாகத்தோடு தொடர்புடையது பால்வளத்துறை என்பதால் ஆவினில் எந்த ஒரு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது அரசுக்கு மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அத்துறை சார்ந்த அமைச்சராக இருப்பவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆவடி சா.மு.நாசர், மனோ தங்கராஜ் ஆகியோரே நேரடி சாட்சியாகும்.
எனவே கடந்த 40 மாதங்களில் மூன்றாவது பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் திரு. ராஜகண்ணப்பன் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி ஆவினையும், பால்வளத்துறையையும் ஊழல், முறைகேடுகள் இல்லாத களங்கமில்லா துறையாக பார்த்துக் கொண்டால் தி.மு.க.,வின் மீதமுள்ள ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராகவே தொடருவார். அல்லது "மாற்றம் ஒன்றே மாறாதது" என்பதை போல இவருக்கும் மாற்றம் அவசியமான ஒன்றாகிப் போகும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“