அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் வாக்காளர்களை சந்தித்து எடுத்துக்கூறுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 2026-ல் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது, இதனை முன்னிட்டு ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும், மக்களை களத்தில் நேரில் சந்தித்து தங்கள், சாதனைகளை எடுத்துக்கூற புறப்பட்டு விட்டனர். அந்தவகையில், ஆளும் தி.மு.க ஜூலை 3 முதல் தமிழக வாக்காளர்களை அவரவர் வீடுகளில் சந்தித்து மாநில அரசின் சாதனைகளையும், ஒன்றிய அரசின் வஞ்சகங்களையும் எடுத்துக்கூற களத்திற்கு செல்வதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு, அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துக் கூறுவோம் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளது. அந்த மூன்று தொகுதிகளிலும் 871 வாக்குச்சாவடிகள் உள்ளது. அந்த வாக்குச்சாவடிகள் மூலம் நேரடியாக சென்று மக்களிடம் திமுக அரசின் திட்டங்கள் எடுத்து கூறுவது, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்து வரும் வஞ்சகங்களை எடுத்து கூறுவது அதன் மூலம் ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்த திட்டத்தில் மக்களை இணைப்பது போன்றவற்றை மேற்கொள்ள உள்ளோம்.
மண் மொழி மானம் காக்க தான் ஓரணியில் தமிழ்நாடு என்பது செயல்படுத்தப்பட உள்ளது. ஒன்றிய அரசின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறோம் என மக்களிடம் எடுத்து கூறுவோம். தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய கல்வி நிதி வழங்கப்படவில்லை, ஆர்.டி.இ., நிதி வழங்கப்படாமல் உள்ளது. இது போன்றவற்றை மக்களிடம் எடுத்து கூறுவோம். எதிர்கட்சியினர் வீடுகளாக இருந்தாலும் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களையும் சந்திப்போம்.
வாக்குச்சாவடியில் எவ்வளவு பேர் இருந்தாலும் அனைவரின் வீட்டிற்கும் செல்லவிருக்கிறோம். ஓரணியில் தமிழர்களாக இணைப்பது தான் முதல் இலக்கு, இரண்டாவது தான் விருப்பபட்டவர்களை கட்சியில் சேர்ப்பது. 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்களை சந்தித்து அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறுவோம் என்றார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மண்டல தலைவர் மதிவாணன், மாவட்ட திமுக நிர்வாகிகள் கோவிந்தராஜ், செங்குட்டுவன், ஒன்றிய திமுக செயலாளர்கள் ராஜேந்திரன், ராமசாமி, நகரக் கழகச் செயலாளர் காயம்பு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
க.சண்முகவடிவேல்