Tamilnadu School Education Minister Anbil Mahesh Press Meet : அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், திருமனூர் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர். முருகேசன். இவரது மகள் லாவண்யா. திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக லாவண்யா தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விடுதியின் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்ட நிலையில், கிறிஸ்டியன் பள்ளியான தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவியை மதம் மாற வற்புறுத்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் தற்கொலை செய்துகொண்டதாக பாஜனவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக பாஜனவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாணவி தற்கொலை சம்பவம் குறித்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
மாணவியின் தற்கொலை குறித்து போலீசாரும் பள்ளி கல்வித்துறை சார்பிலும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், குற்றம் செய்தது யாராக இருந்தாலும், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தும் அமைப்புகள் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தரப்படும்.
பள்ளிகளில், ஜாதி மதம் மற்றுமு் அரசியல் ரீதியான பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்கொலை செய்துகொண்ட மாணவி கிறிஸ்டியன் பள்ளியில் படித்தாலும், அந்த பள்ளியில் நிறைய இந்துக்கள் படித்து வருகினறனர். இதனால் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், பல சந்தேகங்களின் அடிப்படையில் போராடும் அமைப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. பள்ளியில் பிரச்சினை வந்தால் மறைக்காமல் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண பள்ளிகள் முன்வரவேண்டும்.
மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளியிடம் இருந்து விளக்கங்கள் கேட்டுள்ளோம். மரண வாக்குமூலம் என்பதை ஒரு துறையை சாந்தவர்கள்தான பதிவு செய்ய வேண்டும். ஆனால் சில அமைப்புகள் மாணவியிடம் மரண வாக்கு மூலம் வாங்கியுள்ளது. இது மிகப்பெரிய தவறு இதற்கு சட்டரீதியாக என நடவடிக்கை எடுக்க வேண்டுமே அதை நமது காவல்துறை எடுத்துக்கொண்டிருக்கிறது. என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பள்ளிகளின் பொதுத்தேர்வு குறித்து பேசிய அவர், 10,11,மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும். தற்போது ஊரடங்கு ஜனவரி 31-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால், ஊரடங்கு குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தும்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில், கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்றும், பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும், மே மாத தொடக்கம் அல்லது இறுதியில் தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “