சமக்ரா ஷிக்ஷா (Samagra Shiksha) திட்டத்திற்கு 2024-25-ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய நிதியில் முதல் தவணை கூட வழங்கவில்லை, இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய் பரப்புவதாக சிலர் சொல்கிறார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தவிர 33 மாநிலங்களுக்கு 2 தவணை நிதியையும், 4 மாநிலங்களுக்கு 3 வது தவணை நிதி உட்பட ரூ.17,632.41 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது என அமைச்சர் அன்பில் தான் வெளியிட்டுள்ள மகேஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு எந்த மாநிலத்திற்கும் இன்னும் விடுவிக்கவே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு மூன்று தவணைகளாக 2024 - 2025'ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதில் "தமிழ்நாடு" இல்லை. போகிற போக்கில் பொய் சொல்லிவிட்டு, அதில் அம்பலப்படும்போது அதுகுறித்த எந்த சஞ்சலமும் இல்லாமல் அடுத்த பொய்யால் ஈடுகட்ட நினைப்போரை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது அவர்கள் கைவிடவேண்டும். 2024-25ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசின் 60% பங்கான ரூ. 2,152 கோடி நிதியினை தமிழகத்துக்கு மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மேலும், மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ. 17,632.41 கோடி நிதியினை மத்திய அரசு விடுத்துள்ளது.
தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடியும், 2024-25ஆம் ஆண்டுக்கான நிதி ரூபாய் 2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.