திருச்செந்தூரில் ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தன்னிடம் உதவி கேட்ட ஒரு மாணவிக்கு கட்டுக்கட்டாக பணத்தை அள்ளி கொடுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில், இதற்கு முன்பே அரசியல் கட்சிகள் தேர்தல், கூட்டணி, தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதேபோல் அரசியல் தலைவர்கள் பலரும் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளர்.
அந்த வகையில் தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்சந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதனிடையே நேற்று திருச்செந்தூர் தொகுதியில் நடைபெற்ற, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்றுகொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன், அடைக்கலாபுரம் பகுதியில், சாலையோரம் இருந்த டீக்கடையில் டீ குடிக்க சென்றுள்ளார்.
இதற்காக டீக்கடையில் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் அமர்ந்திருந்தபோது, அந்தோணி பிச்சை என்ற கூலித்தொழிலாளியின் மகள் ஆஷா என்பவர், அமைச்சர் அனிதா ராதகாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த மனுவை உடனடியாக பிரித்து படித்தபோது அதில் மாணவி ஆஷா தனது உயர் படிப்புக்காக லேப்டாப் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்துள்ளார்.
இதை படித்த அமைச்சர், லேப்டாப் மற்றும் இதர செலவுகளுக்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டபோது, அந்த மாணவி ரூ75 ஆயிரம் ஆகும் என்று சொல்ல, உடனடியாக தனது உதவியாளரை அழைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரிடம் ரூ75 ஆயிரம் பணம் வாங்கி அதை மாணவியிடம் கொடுத்துள்ளார். நல்லா படிக்கணும் என்று கூறி இது முதல்வர் கொடுக்கும் பணம் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“