க. சண்முகவடிவேல்
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அரியமங்கலம் அருகே உள்ள எஸ்.ஐ. டி பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் இந்த வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது அரசின் நோக்கம். ஹெச்.சி.எல் கம்பெனியில் 2000 பேருக்கு ±2வில் 60 சதவீதம் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட கம்பெனிகள் வந்துள்ளன. இதில் 3000-க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை 64 வேலை வாய்ப்பு முகாமில் ஒரு லட்சத்து நான்காயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம்.

இதுவரை மாற்றுத்திறானாளிகள் 700 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 3000 கம்பெனிகள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று உள்ளன. உங்களால் முடியும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“