தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க ஆட்சியில், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பான கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் கைவசம் இருந்த படங்களை முடித்த அவர், திடீரென அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார்.
அதன்பிறகு, தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் உதயநிதி, கட்சியில் இளைஞரணி தலைவராகவும் இருக்கிறார். மேலும், பல்வேறு அரசியல் நிகழ்வுகள், மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் உதயநிதி, முதல்வர் ஸ்டாலினை விடவும், அதிகமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பங்கேற்று வருகிறார் இதன் காரணமாக அவர் விரைவில், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வந்தது.
குறிப்பாக சமிபத்தில், தொழில் முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் அதிகமாக பரவத்தொடங்கியது. இது குறித்து திமுக. மூத்த தலைவர்கள் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், துணை முதல்வர் தொடர்பான தகவல்கள் வெளியாவது தொடர்ந்து வருகிறது.
இதனிடையே தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் விமான நிலையம் செல்லும்போது செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவரிடம் துணை முதல்வர் குறித்து கேள்வி எழுப்பியது. இதற்கு ரஜினிகாந்த் அரசியல் கேள்வி வேண்டாம் என்று பதில் அளித்தாக தகவல்கள் வெளியானது. இது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வர் பதவி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் பல்வேறு கேள்விக்ளுக்கு பதில் அளித்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறாரா என்ற கேள்வி கேட்டபோது இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது என்று சொல்லிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.