தி,மு.க எம்.பி கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது தந்தையும், அமைச்சருமான துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
வேலூர் தொகுதியின் தி.மு.க எம்.பியான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி தி.மு.க.வினர், கதிர்ஆனந்த் வீட்டில் குவிந்துள்ளனர். கதிர் ஆனந்த் துபாய் சென்றுள்ள நிலையில், வீட்டில் அவரது வேலையாட்கள் மட்டுமே இருந்துள்ளனர். கதிர் ஆனந்தின் வழக்கறிஞர் குழுவும் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதனிடையே, சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் வீடு மற்றும் கிடங்கு என அமலாக்கத்துறை அதிகாரிகள் 35க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் துரைமுருகனும் அவரது மகனும், திமுக எம்.பியுமான கதிர் ஆனந்த்தும் காட்பாடியில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது, அந்த வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சோதனையால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வேலையாட்கள், இது குறித்து சென்னையில் உள்ள அமைச்சர் துரைமுருகனுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சோதனை தொடர்பாக கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்கள் மற்றும், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் துரைமுருகன் செய்தியாளாகளை சந்தித்தார். அப்போது, எந்த துறை அதிகாரிகள் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு என்ன விபரம் தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சட்டசப்பேரவைக்கு சென்ற அவர், வரும் ஜனவரி 6-ந் தேதி சட்டசபை கூட்டம் தொடங்கப்பட உள்ளதால், அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை செயல்பாடுகள், மற்றும் அலுவல்கள் தொடர்பான ஆலோசனைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் அவை முனைவராக இருக்கும், துரைமுருகன், கூட்டத்தொடரின்போது எதிர்கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை அரசியல் ரீதியாக சமாளிப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு தேர்தலின்போது வேலூரில் தி.மு.க நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.11 கோடி பணத்தை வருமான வரித் துறை பறிமுதல் செய்தது.
இந்த பணம் தேர்தலில், வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு கொடுக்க, வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்த பண விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது அந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“