காவிரி திமுக – காங்கிரஸ் கட்சி இணைந்து நாடகம் நடத்துவதாக அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் கையெடுத்து கும்பிட்டது தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுது தொடர்பான தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கு இடையே கடந்த சில தினங்களாக கடுமையாக வாக்குவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், காவிரிநீர் மேலான்மை வாரியத்தின் உத்தரவுப்படி தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனிடையே காவிரி நீர் திறந்துவிடுவது தொடர்பான கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசு சார்பில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதனைத் தொடர்ந்து இன்று காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆனாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கூடாது என்று கர்நாடக விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு காவிரியில் வரும் உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு மாநிலங்களிலும் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனிடையே சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு கர்நாடக அரசு நீரை திறந்துவிட்டிருந்தால் பிலிகுண்டலுவில் 4.15 டிஎம்சி தண்ணீர் வந்திருக்கும். ஆனால் தற்போது 3.15 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது இது குறித்து பின்னர் பேசுவோம் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து காவிரி விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் இரண்டும், நாடகமாடுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கததில் குறிப்பிட்டுள்ளது குறித்து கேட்டபோது, காரில் இருந்தபடியே கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் துரைமுருகன், பெரியவர் அடியேன் சின்ன பையன் எங்க கிட்ட கேட்கிறீங்களே என்று கிண்டல் செய்யும் பாணியில் பேசிவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“