Advertisment

அரசு வேலைக்கு ஹிந்தி தகுதி? அதிகாரி பணியிடை நீக்கம்; அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை; சமூக நலத்துறை பணிக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று வெளியான அறிவிப்புக்கு அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

author-image
WebDesk
New Update
DMK MLA Geetha Jeevan tested Covid-19 positive, Tuticorin DMK MLA Geetha Jeevan, geetha jeevan dmk mla, திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி, தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவன், கோவிட்-19, கொரோனா வைரஸ், geetha jeevan tested Covid-19 positive, coronavirus, tuticorin, geetha jeevan

சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பெண்களுக்கான உதவி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது சர்ச்சையான நிலையில், அதிகாரி தவறுக்கு அரசு மீது பழி போடக் கூடாது என அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், "மகளிர் உதவி எண்.181" சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண்.181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் "அழைப்பு ஏற்பாளர்" என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. மாண்பமை நீதிமன்றம், ஒன்றிய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, அய்யன் திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டது தான் திராவிட முன்னேற்றக் கழக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு.

மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல் அரசு. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment