அமைச்சர் கே என் நேரு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
தமிழக அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் அவருக்கு இருந்ததால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சரவையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் கே.என்.நேரு, சிகிச்சை முடிந்து தன்னுடைய வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கே.என்.நேரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றது குறித்து அமைச்சர் தரப்பில் கேட்டபோது, தமிழகத்தில் தற்போது தொடர்ந்து வரும் மழையின் காரணமாக அவர் அவ்வப்போது நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு பணியில் ஈடுபட்டதில் நேற்று முதல் காய்ச்சல் தொடர்ந்தது. வீட்டில் சிகிச்சை கொடுக்கப்பட்டாலும், 24 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் குளிர் காய்ச்சலின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில், இன்று அதிகாலை கே.என்.நேரு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் குறைந்ததும், இன்று இரவு முழுமையான உடல் பரிசோதனைக்கு பிறகு மீண்டும் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர். முன்னதாக, கே.என்.நேரு அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸூம் நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“