க. சண்முகவடிவேல்
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய் குழு எஸ்.பி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளரும், தற்போதைய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது கடத்தப்பட்டு, கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 01.11. 2022-ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 6ல் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதியிடம் அனுமதி பெற 13 ரவுடிகள் ஆஜர்படுத்தபட்டனர். ஆனால் அவர்கள்(ரவுடிகள்) தரப்பு வழக்கறிஞர் முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று வாதத்தை முன் வைத்தார்.
மேலும் சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி நேரில் ஆஜராகி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 01.11.2022ம் தேதி அன்று நீதிபதி சிவக்குமாரிடம் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ஜெயக்குமார், துணை கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதில் 13 பேரில் லெப்ட் செந்தில் என்பவர் கடலூர் மத்திய சிறையில் உள்ளார். மீதமுள்ள 12 பேரில் சாமி ரவி, மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 8 பேர் நீதிமன்றத்திற்க்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனை எந்த வகையில் நடத்த போய்கிறார்கள்(SIT),என்ன கேள்விகள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ரவுடிகள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டனர்.
அனைத்து ரவுடிகளும் தங்களது வழக்கறிஞர் மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மதமா இல்லையா என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 14.11.2022ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு எஸ் பி ஜெயக்குமார் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், உண்மை கண்டறியும் சோதனை முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என்ற வாதத்திற்கு அளித்த பதிலில், முறையான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம், வழக்கறிஞர்கள் பொய் சொல்கிறார்கள். சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த மனுவை நீதிபதி சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். 13 பேரின் சம்மத ஆவணங்கள் தாக்கல் செய்வது வருகிற 14ஆம் தேதி அன்று தெரியவரும் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“