கூட்டணி கட்சி எம்.பியை ஒருமையில் பேசுவதா? அமைச்சர் கே.என்.நேருவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

Tamilnadu News Update : மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான் அந்த ஆள் கிட்ட இந்த கேள்வியை கேளுங்கள் என அமைச்சர் நேரு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu News Update : திமுகவின் கூட்டணி கட்சியினா கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை, தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவன் இவன் என்று ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் திமுகவின கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெங்கடேசன், நாடாளுமன்றத்தில், தமிழர் மற்றும் தமிழர் நலம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பி வருகிறார். மேலும் அரசியல் தொடர்பான பல கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வரும் அவர், தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் பல கேள்விகளை முன்வைத்து வருகிறார்.  

இந்நிலையில், திமுகவின் மூத்த தலைவரும், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருமான கே.என்.நேரு தற்போது தமிழகத்தின் நகராட்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், எம்பி வெங்கடேசனை ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்… மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான் அந்த ஆள் கிட்ட இந்த கேள்வியை கேளுங்கள். என்று பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அமைச்சரின் பேச்சு பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கணேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. மாறாக சம்பத்நதப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்ற எம்பி ஒருவன் இருக்கிறான். அவனிடம் கேளுங்கள் என்று நேரு பதில் அளித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட கூட்டணி கட்சியின் எம்பியை ஆளுங்கட்சி அமைச்சர் பொதுவெளியில் இவ்வாறு பேசியது கண்டனத்திற்கு உரியது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு தனது ட்விட்டர் பதிவில், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu minister kn nehru say controversy words about mp venkatesan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com