ஈரடுக்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் மதுரவாயல் உலக சுற்றுலா தளமாக மாறும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரவாயல் எம்.எல்.ஏ க.கணபதி மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா மேடையில் பேசிய மா சுப்பிரமணியன், "2007 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை தொடங்கினார். ஆனால் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்த பிறகு அந்த பணிகள் முறையான காரணங்கள் இன்றி முடக்கப்பட்டன. அப்போதைய அந்த பணிகள் முடிந்திருந்தால் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முடிந்திருக்கும். இப்போது 5000 கோடியை தாண்டி அந்த பணிகள் செய்ய வேண்டி உள்ளது.
அதிமுக ஆட்சியில் பாலம் கட்டப்படாதது எதிர்த்து மக்களுடன் சேர்ந்து நாங்கள் போராடினோம். அப்போது எங்கள் போராட்டத்தை அதிமுகவினர் ஏற்காமல் பாலம் கட்டுமான பணியை தவிர்த்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலத்தை கட்டுவோம் என அப்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஓர் அடுக்கு பாலத்தை தானே தடுத்தீர்கள் இப்போது ஈரெடுக்கு பாலமாக கட்டுகிறோம் என கூறி பிரம்மாண்டமாக கட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த பாலம் கட்டி முடிந்தவுடன் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இந்தியாவில் உள்ள மக்கள் மட்டும் இன்றி உலக மக்கள் அனைவரும் 15 கிலோமீட்டர் நீளமுள்ள ஈரடுக்கு பாலத்தை வந்து சுற்றி பார்த்துவிட்டு செல்வார்கள்" என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“