/indian-express-tamil/media/media_files/2024/11/13/2DgMTy3GReaCXERDt8qp.jpg)
கத்திகுத்தில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார் என்றும் சிகிச்சை பெற்று வரும் அவருடன் வீடியோ காலில் பேசினேன் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் பிரேமாவிற்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடந்தாண்டு இந்த மருத்துவமனையில், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர், தனியார் மருத்துவமனையில் 3 மாத சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை, வெளிநோயாளி பிரிவில் மருத்துவரை சந்திக்க 4 பேருடன் விக்னேஷ் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியிடம் சுமார் அரை மணிநேரம் விக்னேஷ் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் விக்னேஷ், தான் கொண்டு சென்ற கத்தியால், மருத்துவர் பாலாஜியை குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேற முயன்ற விக்னேஷை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவ சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் உள்ளார். மருத்துவர் பாலாஜியுடன் வீடியோ காலில் பேசினேன். மருத்துவ சிகிச்சையில் குறைபாடு எனக் கூறி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மருத்துவ சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மருத்துவ சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். பேச்சுவார்த்தை முடிந்து மருத்துவர்கள் நிறைவுடன் சென்றனர்.
மருத்துவர்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நோயாளிகளுடன் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது மருத்துவமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு, ரோந்து பணி, பாதுகாப்பு குழு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உள்ளன
மருத்துவ சங்கங்கள் கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிண்டி மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அரசு மருத்துவர்கள் விரோதப்போக்குடன் யாருக்கும் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். மருத்துவத்தில் குறைபாடு உள்ளதாக போலியான காரணத்தைக் கூறி தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல. தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். சிகிச்சை முடிந்ததும் அவரிடம் முறையாக விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.