அண்ணாமலை என்மீது வைத்த குற்றச்சாட்டு வீடியோவை பார்தேன், சண்முகம் என்ற வட்ட செயலாளர் என்னிடம் போனில் பேசியதாக கூறியுள்ளார். இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது சமூகவலைதளங்களில், ஆளும் தி.மு.க. மற்றுமு் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவில், அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கில் தண்டணை பெற்றுள்ள ஞானசேகரன், பிளைட் மோடில் இருந்த செல்பேசியை ஆன் செய்தபோது, முதலில் காவல் அதிகாரியிடம் பேசினார். அடுத்த திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் அடிக்கடி பேசினார். இந்த சண்முகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தொடர்பில் இருப்பவர். அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? ஞானசேகரன் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
தற்போது இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்ணா பல்கலைகழக சம்பவத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல் துறை மிகச்சிறப்பாக நடவடிக்கை எடுத்து 5 மாதத்தில் தண்டனை தரப்பட்டுள்ளது. அண்ணாமலை என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு வீடியோவை நானும் பார்த்தேன். அவர், சண்முகம் என்ற வட்டச் செயலாளர் என்னை அழைத்ததாக தெரிவித்து உள்ளார். இது ஒரு குற்றச்சாட்டா?
நான் ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர், என் தலைமையின் கீழ், 52 வட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் சண்முகமும் ஒருவர். ஒவ்வொரு நாளும் 10 - 15 பேர் எனக்கு போனில் அழைப்பார்கள். ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளரிடம் பேசியது எப்படி குற்றச்சாட்டாகும்? ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு வட்ட செயலாளர் என்னிடம் பேசினார், அதை வைத்து சுப்பிரமணியனை விசாரிக்க வேண்டும் என சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமா என தெரியவில்லை என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.