கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக்கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகரில் அவிநாசி மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் உள்ள கூட் ஷெட் சாலை மற்றும் ஆர் எஸ் புரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி பேசுகையில், 'நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்குவதை தவிர்க்க நடவடிக்கைகள் அதிகாரிகளால் எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் அருமையான முன்னேற்பாடுகளை செய்து இருக்கின்றனர். எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதி்ர்கொள்ளும் அளவிற்கு நம்முடைய அதிகாரிகள் வேலை செய்து இருக்கின்றனர். முதல்வர் தொடர்ந்து இது குறித்து பேசி கொண்டு இருக்கின்றார்.
முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் ஆர்.டி.ஓ ஒருவர் பணியமர்த்தப்பட்டு பணிகளை மேற்கொள்ள அறவுறுத்தபட்டுள்ளது. அனைத்து துறைகளும் இணைந்து தேவையான முன் ஏற்பாடுகளை செய்துள்ளனர். பொதுவாக குப்பைகளை சாக்கடையில் போடாமல் இருந்தால் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். மக்கள் இதை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.