/indian-express-tamil/media/media_files/zLdNRw6r86wmTYheyvJH.jpg)
தி.மு.க அமைச்சர் முத்துச்சாமி
கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்ததை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி சாலையில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் மகளிர் உரிமைத் திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பயனாளிகளுக்குமகளிர் உரிமைத் தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு அதிகாரிகளிடம் பேசி வருகிறார். இன்று ஒரு கோடிக்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு இந்த திட்டம் சென்றடைகிறது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மனுக்களை பெற்று ஆய்வு செய்து ஒரு பகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள், விட்டுப்போனவர்கள் மேல் முறையீடு செய்யவும் முதல்வர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பிறமாநிலங்களும் தமிழகத்தின் திட்டங்களை பார்த்து அதை செயல்படுத்த முயல்கின்றனர். பலரின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்று முதல் பணம் சென்று கொண்டு சேர்ந்து வருகின்றது.
மொத்தம் ஒரு கோடியே 6 லட்சம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். விடுபட்டவர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். மொத்தமாக வந்தவுடன் தான் புள்ளி விபரங்கள் கிடைக்கும். மாவட்ட வாரியாக தகவல் கொடுப்பதற்கு சிறிது காலம்வேண்டும். ஒரு சில இடங்களில் பயனாளிகளின் தகவல்கள் கேட்கப்படுகிறது. ஈரோட்டில் அது போன்ற தகவல் வந்தது.
யாரும் தகவல் கேட்டால் சொல்ல வேண்டாம், அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் பயனாளிகள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். கோவை மாநகராட்சி மேயர் உடம்பு சரி இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள், அதனால் அவர் இன்றைய நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்றார். மருத்துவமனைக்கு போய் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன் என்று கூறிய அமைச்சர், அண்மையில் அரங்கேறிய மேயர் குடும்பத்தினர் விவகாரம் குறித்தான கேள்விக்கு பதிலளித்தார். அதில்மேயர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது. திமுக கவுன்சிலர்கள் யாரும் புகார் எதுவும் எனக்கு சொல்லவில்லை.நான் பொறுப்பு அமைச்சர், பொறுப்பாக விசாரித்துவிட்டு சொல்கிறேன்.
நல்ல விஷயங்களை கேளுங்கள். விமர்சனங்களை மட்டும் கேள்வியாக கேட்காதீர்கள். மேயர் மீதான குற்றசாட்டுகள் குறித்து விசாரிக்கலாம். என்ன என்று தெரிந்து கொண்டு அடுத்த கூட்டத்தில் பதில் சொல்கின்றேன். அவுட்சோர்சிங் முறையில் இருக்கும் தூய்மை பணியாளர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள், கோவை மாநகராட்சி குறித்து புகார் தெரிவிக்க பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடுத்த புகார் எண்ணில் ஏதாவது புகார் வந்திருக்கின்றதா? அப்படி வந்திருந்தால் எங்களுக்கு அனுப்ப சொல்லுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம்
இந்தத் திட்டத்தை பற்றி அவர்கள் ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும் இந்த திட்டத்தை மறைமுகமாக நடத்தவில்லை. மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத்தான் ஊடகங்கள் இருக்கின்றது. இதன் மூலம் மிகப்பெரிய திருப்தி மக்களிடம் இருக்கின்றது. நிதித்துறை கடுமையான சூழலில் இருந்தாலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.