தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது உச்சநிதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதனை தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி செந்தில் பாலாஜி ஜாமின் குறித்து பேசுகையில், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இன்றைக்கு காலை அந்த செய்தி கிடைத்திருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. உச்ச நீதிமன்றம் இதில் சரியாக ஒரு முடிவாக நல்ல முடிவாக கொடுத்துள்ளது. நிச்சயமாக மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.
இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக. இதை ஒரு வெற்றி மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம்.
அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும் முதலமைச்சரும் முடிவெடுப்பார்கள். விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“