வால்பாறையில் கனமழையின் காரணமாக சோலையார் அணை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்து ராஜேஸ்வரி என்ற பெண் அவரது பேத்தி ஜனப்பிரியா (10ம் வகுப்பு மாணவி) உயிரிழந்தனர். இதே போல் பொள்ளாச்சி திப்பம்பட்டி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து ஹரிஹரசுதன் (20) என்ற வாலிபர் உயிரிழந்தார்.
இதனை அறிந்த தமிழக முதல்வர் இறந்த குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.இதனையடுத்து இன்று வீட்டு வசதித் துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி வால்பாறை நேரில் சென்று உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் காசோலை வழங்கினார்.
பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் உயிரிழந்த ஹரிஹரசுதன் இல்லத்திற்கு சென்று பெற்றோர்கள் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து தமிழக அரசு சார்பில் மூன்று லட்சம் ரூபாய் திமுக சார்பில் ரூ 50,000 வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது
தமிழகத்தில் ஏற்கனவே வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை தவிர்த்து புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள் எத்தனை ஆண்டுகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்று உத்தரவாதத்துடன் ஒப்பந்ததாரர்களிடம் உறுதி பெற்று தான் பணிகள் வழங்கப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்கள் இருக்கும் உதாரணமாக குடியிருப்புகளின் மேல் செடிகள் வளர்ந்தால் அதை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை குடியிருப்பு வாசிகள் மேற்கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சி பொருப்பேற்றவுடன், 60 இடங்களில் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள கட்டிடங்கள் மிகவும் மோசமாக இருந்ததை கண்டறிந்து பத்தாயிரம் குடியிருப்புகள் இடிக்க உத்தரவிடப்பட்டு 90 சதவீதம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டி அரசு அலுவலர்கள் அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ” இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்.
கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“