தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் அக்டோபர் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் நோக்கில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாதத்தின் கடைசி இரு ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்ற நிலையில், தீபாவளி பண்டிகைக்காக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் வரும் ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் பொருட்களை பெறலாம் என்றும், 24,610 முழுநேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 34,774 ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“