காசி ஆன்மீக பயணத்திட்டம் தொடரும் என்றும், ஏற்கனவே விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் பிரசித்தி பெற்ற தளங்களை பார்ப்பதற்காக ஆன்மீக பயணத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் மக்கள் பலரும் ஆன்மீக பயணம் சென்று பல கோயில்களை கண்டு வருகின்றனர். இந்த பயணத்தின்போது மக்களுக்கு உணவு உட்பட அனைத்து வசதிகளையும் தமிழக அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆன்மீக ஈடுபாடு கொண்ட வயதில் மூத்தோரை இலவசமாக காசிக்கு ஆன்மீக பயணம் அழைத்துச்செல்லும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்கட்டமாக காசி ஆன்மீக பயணதிட்டத்தின் கீழ் காசி சென்று திரும்பிய 67 பேர் கொண்ட குழுவை அமைச்சர் சேகர் பாபு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில்,
முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 27வது அறிவிப்பாக சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து காசிக்கு புனிதயாத்திரையை அறிவித்திருந்தோம். இதில் முதல்கட்டமாக கடந்த 22-ந் தேதி 66 நபர்களுடன் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.
இந்த பயணத்தில் காசிக்கு சென்றவர்கள் அங்கு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்து மகிழ்ச்சியோடு சென்னை திருப்பியிருக்கிறவர்களை அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வரவேற்றிருக்கிறோம். இந்த பயணத்திற்கு செலவான 50 லட்சம் தொகையை தமிழக அரசின் சார்பில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 2022-23 ம் ஆண்டுக்கு 200 நபர்களுக்கு காசி புனித யாத்திரை திட்டத்தை அறிவித்திருந்தோம்.
தற்போது முதற்கட்ட பயணம் முடிவடைந்துள்ள நிலையில், 2-வது கட்ட புனிதயாத்திரை அடுத்த மாதம் மார்ச் 1-ந் தேதியும், மார்ச் 8-ந் தேதியும் இந்த பயணத்திட்டம் மீண்டும் தொடங்க இருக்கிறது. 3 பிரிவுகளாக பிரித்து புனித யாத்திரைக்கு மக்களை அழைத்துச்செல்கிறோம். இவர்களுடன் மருத்துவக்குழுவினரையும் அனுப்பி வைத்துள்ளோம்.
முதற்கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த 66 பேர் காசி ஆன்மீக புனித யாத்திரை சென்றுவந்துள்ளனர். அடுத்தகட்ட பயணத்திற்காக மொத்தம் 590 பேர் இந்த பயணத்திற்காக மனு செய்திருக்கிறார்கள். அதில் 200 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்து 2023-24-ம் ஆண்டு இந்த பயணம் மீண்டும் தொடங்கும்போது ஏற்கனவே விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ஆன்மீக புனிதயாத்திரை தொடரும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“