சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக பணகபபரிமாற்றம் செய்த வழக்கில், கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது காவலில் இருந்து வரும் நிலையில், இதுவரை 6 முறை அவருக்கு காவல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே தனக்கு ஜாமீன வழக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி அல்லி தலைமையில், கடந்த வாரம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தனக்கு எதிராக நேரடியாக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ.க.வின் அழுத்தம் காரணமாக தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
அதே சமயம் பலருக்கும் வேலை வாங்கி தருவதாக கூறி வங்கி கணக்கில் இல்லாமல் நேரடியாக பணம் வங்கியதாகவும், அவருக்கு எதிரான ஆதாரங்கள் முழுமையாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் தரக்கூடாது என வாதிடப்பட்டது. இது தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
தொடர்ந்து இன்று இந்த மனு மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே செந்தில் பாலாஜியின், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணங்கள் தீர்ப்பின் உத்தரவு நகலில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“