அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவிதான். மு.க.ஸ்டாலின் இவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பிளவுபட்டதை தொடர்ந்து டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த நிலையில், 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, அதிமுகவின் விஜயபாஸ்கரை தோற்கடித்து வெற்றி பெற்றார். தற்போது திமுகவில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேறுள்ள இவர், தற்போது திமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில், திமுகவினர் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அவரது அடுத்து இலக்கு முதல்வர் பதவிதான் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வாகனத்தை தாக்கிய கரூர் நகராட்சி கவுன்சிலரை கண்டித்து அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் தங்கமணி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவினர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அவர்கள் கழகமே கோவில் என்று இருந்து வருகின்றனர். கரூர் தனி மாநிலமாக உள்ளது அதனால்தான் இங்கு அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி அடுத்து போக உள்ள கட்சி பாஜக. செந்தில்பாலாஜியின் நடிப்பை ஜெயலலிதா புரிந்துகொள்ள காலதாமதம் ஆகிவிட்டது.
அவரின் அடுத்த திட்டமே முதல்வர் ஆவதுதான். முதல்வரின் உளவுத்துறை கரூரில் சரியாக செயல்படவில்லை. இங்கு உளவுத்துறை அதிகாரிகள் செந்தில்பாலாஜியை தாண்டி தலைமைக்கு எதையும் கொண்டு செல்ல முடியாமல் உள்ளனர். திமுகவும் ஸ்டாலின் குடும்பம் உள்ளிட்ட அனைவருமே அவரை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒரு குழியில் தள்ளிவிட்டு அடுத்த அவரது நோக்கம் முதல்வர் ஆவதுதான். இதை முதல்வருக்கு எச்சரிக்கையாக சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேள்.
தமிழகத்திலர் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது. அதேபோலத்தான் இப்போதும் உள்ளது. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் குடும்ப ஆட்சிதான் நடத்தும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் கொடுக்கும் திட்டத்தை தனியாருக்கு கொடுக்க முயற்சி நடந்து வருகிறது. இதன் மூலம் மின்சாரத்துறையில் புதிய வகை ஊழலுக்கு வழி செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“