முதல்வர் பதவியேற்று முதல்முறையாக துபாய் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்து எதிர்ட்சியினர் கடுமையான விமர்சனங்களை தொடுத்து வரும் நிலையில், முதல்வர் தனி விமானத்தில் துபாய் சென்றது ஏன் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
தற்போது இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு,
முதலமைச்சர் அவர்களுடைய வெளிநாட்டுப் பயணம் தனி விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது, அவர் விமான பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிற சூழ்நிலையில், விமான வசதிகள் கிடைக்காத காரணத்தினால், அவருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தனி விமானத்திற்கான செலவைகூட திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறதே ஒழிய, இன்றைக்கு அரசாங்கத்தினுடைய நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
இரண்டாவதாக, அவர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். முதலமைச்சருடைய இந்தப் பயணம் என்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாத்திரம் அல்ல, அயலகத்திலே கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினுடைய வளத்திற்காகவும், வாழ்விற்காகவும் அவர் இந்தப் பயணத்தை இங்கே மேற்கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இங்கு வந்திருக்கக்கூடிய அவருக்கு தமிழ்ச் சமுதாயம் அளித்திருக்கக்கூடிய வரவேற்பை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். நம்முடைய உலக வர்த்தகப் பொருட்காட்சி என்பது முடிவுறும் தருவாயில் முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று, இது கோவிட் காலத்தினாலேயே தள்ளிப்போய் வந்திருக்கிறது. இன்னொன்று இது ஆரம்பிக்கும்போது வந்திருக்கக்கூடிய வரவேற்பைவிட, முடியும்போதுதான் மிகப் பெரிய கூட்டம் வந்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறார்கள். நான் கேட்க விரும்புவது, அவர் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. இன்றைக்கு முதலமைச்சர் இந்த மூன்று நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ 6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார். வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக ஈர்த்தாக சொல்லப்படும் முதலீடுகள் குறித்து சட்டமன்றத்தில் நான் மிகத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறி அவையெல்லாம் அவை குறிப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
இன்னொன்று... சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து இபிஎஸ் பேசியிருக்கிறார். விருதுநகர் பாலியல் வழக்குக் குறித்துக்கூட அவர் பேசியிருக்கிறார் அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபொழுது, சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரித்தது என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். . . முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துக் கொண்டிருக்கக்கூடிய புகழை, அந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் இத்தகைய புழுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இறைத்துக் கொண்டிருக்கிறார். இதை நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.