தன்னை மீட்க வேண்டும் என்பதற்காக எந்த வகையிலும் தனது புகழை பயன்படுத்ததா நடிகர் அமீர்கானுக்கு நன்றி என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அமீரகான் கடந்த சில மாதங்களாக தனது தாயின் மருத்துவ காரணங்களுக்காக சென்னையில் தங்கியுள்ளார். கடந்த மாதம் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அமீர்கான் அதன்பிறகு பெரிதாக வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
இதனிடையே கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்று மிக்ஜாம் புயலாக மாறிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
மேலும் அதியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தத்தளித்து வரும் நிலையில், பல பகுதிகளில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் உணவு தேவைகளை சமூகஆர்வலர்கள் பலரும் தீர்த்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டில் மழைநீர் புகுந்ததால் தன்னால் வெளியில் வர முடியவில்லை என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து ஒரு சில மணி நேரங்களில் விஷ்ணுவிஷால் அவருடன் சேர்ந்து நடிகர் அமீர்கானும் வெள்ள பாதிப்பில் இருந்து தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணுவிஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டியதற்கு நன்றி விஷ்ணு விஷால். அப்படியே உங்கள் அருகில் இருக்கும் நபருக்கும் (அமீர்கான்) சிறந்த மனிதனாக திகழ்வதற்கு நன்றி. மீட்பு உதவி பெருவதற்கு அவர் எந்த வகையிலும் தனது புகழை பயன்பத்தவில்லை. அவரின் இந்த செயல் என்னை பிரமிக்க வைத்தது. தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தேவையானதை சாதிக்க நினைப்பவர்களுக்கு அவர் ஒரு பாடமாக உள்ளார்.
Thanks for the appreciation @TheVishnuVishal and please do thank the gentleman next to you for being such a class human being ! Astounding that he didn't try to pull any strings to be rescued ! Awesome to see him being so grounded and WAITING HIS TURN to be rescued just like any… https://t.co/3ByJr8jRRs
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 5, 2023
புயலின் பாதிப்பை உணர்ந்து பொறுமையாக மீட்பு உதவிகள் வரும் வரை காத்திருந்து உதவி பெற்ற நடிகர் அமீர்கான் போன்றவர்களுக்கு நன்றி. மீட்பு பணிகள் திட்டமிட்டபடி தொடரும் என்று பதிவிட்டுள்ளார். டி.ஆர்.பி.ராஜாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.