சனாதனம் குறித்து அவதூராக பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பான ஒட்டுமொத்த வழக்கையும் தமிழ்நாட்டுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றில் பேசியபோது, டெங்கு மற்றும் மலேரியாவை போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்குகள் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதில் ஒவ்வொரு வழக்கிற்க்கும் தனித்தனியாக ஆஜராக முடியாது என்றும், அனைத்து வழங்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விவாரித்த நீதிபதி, உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மனு மீது பதில் அளிக்க, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகள் மற்றும் இது குறித்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்குகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு மாற்ற முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு மாற்றப்படலாம் என்று கூறியுள்ளனர்.
அதேபோல் இந்த வழக்கில் நேரடியாக ஆஜராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“