பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருவாரூர் சென்றுள்ள திமுக இளைஞரணி செயலாளரும், விளைாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அழைத்துச்சென்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூரில், திமுகவை சேர்ந்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பரும், மறைந்த திமுக பிரமுகருமான தென்னவனின் 100-வது பிறந்த நாள்விழா, மறைந்த மாவட்ட தலைவர் சித்தமல்லி சோமசுந்தரத்தின் படதிறப்பு விழா ஆகிய விழாக்கள் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் மேம்பாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி இன்று திருவாரூர் வந்தார். அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் குதிரைகள் பூட்டப்பட்ட தனது சாரட் வண்டியில் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்து அவரே ஓட்டிச்சென்றார்.
குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பயணித்து முப்பெரு விழாவில் கலந்துகொண்ட உதயநிதி விழா முடிந்து அங்கிருந்து கிளம்பிய நிலையில், அவர் சாரட் வண்டியில் வந்து இறங்கியது குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்து சரவண குமார் என்பவர் தனது ட்விட்டர் பதிவில்,
பூண்டி கலைச் செல்வன் அன்று ஸ்டாலினுக்கு சாரட் ஓட்டினார். அவர் தம்பி கலைவாணன் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு இன்று சாரட் ஓட்டுகிறார். காலமும் மாறல.சாரட்டும் மாறல. ஸ்டாலினுக்கு சாரட் ஓட்டிய கலைச்செல்வன் தம்பி கலைவாணனுக்கு உதயநிதி சாரட் ஓட்டுவது தானே சம நீதி. வாய் கிழிய சமூக நீதி பேசும் இந்த அறிவாலய மடாதிபதிகளிடம், காஞ்சி மடமும் ஒரு கணம் தோற்று தான் போகும்!
என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.